2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டென்னிஸில் சம்பியனானார் ஸ்லோவன்

Editorial   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீவன்ஸ் தெரிவாகியுள்ளார். தனது சகநாட்டு வீராங்கனையான மடிசன் கீய்ஸைத் தோற்கடித்தே, இவ்வாறு அவர் சம்பியன் பட்டத்தை வென்றார்.

24 வயதான ஸ்லோவன் ஸ்டீவன்ஸ், 2013ஆம் ஆண்டில், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், செரினா வில்லியம்ஸை வென்று, காலிறுதிப் போட்டிவரை சென்று, பலரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதன் பின்னர், காயங்களாலும் ஃபோர்ம் இழப்பினாலும் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபெற முடியாது போனது.

ஐ.அமெரிக்க டென்னிஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னராக, உலகில் 957ஆவது நிலை வீராங்கனையாக, அவர் தரப்படுத்தப்பட்டிருந்தார். எனினும், காயம் காரணமாகப் போட்டிகளில் பங்குபற்றவில்லை என்பதற்காக, “பாதுகாக்கப்பட்ட தரப்படுத்தல்” என்ற முறையின் மூலம், இத்தொடருக்கு அவர் தகுதிபெற்றார்.

2ஆவது சுற்றில் 11ஆம் நிலை வீராங்கனையான ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவைத் தோற்கடித்து, தனது திறமையை வெளிப்படுத்திய அவர், வீனஸ் வில்லியம்ஸை அரையிறுதில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

மறுபக்கமாக, காலிறுதியில், முதலாம் நிலை வீராங்கனையான இருந்த கரோலினா பிளிஸ்கோவாவைத் தோற்கடித்த கொகோ வன்டெவெகேயை, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த மடிசன் கீய்ஸ், தனக்கான வாய்ப்புகள் குறித்தும் நம்பிக்கையுடன் காணப்பட்டார்.

ஆர்தர் ஆஷே விளையாட்டரங்கில், இரண்டு அமெரிக்கர்கள் மோதிய போட்டியில், அதிகம் அறியப்பட்ட மடிசன் கீய்ஸுக்கே, அதிக ஆதரவு காணப்பட்டது.

எனினும், சளைக்காமல் விளையாடிய ஸ்லோவன் ஸ்டீவன்ஸ், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றி, கீய்ஸுக்கு அழுத்தத்தை வழங்கினார். தொடர்ந்து, அடுத்த செட்டில் மேலும் அதிரடியாக விளையாடிய ஸ்லோவன், 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை வெற்றிகொண்டு, மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

ஒரு மாதத்துக்கு முன்னர், தரவரிசையில் 1000ஆம் இடத்துக்கு வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஸ்லோவன், தற்போது 3.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, பரிசாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கலப்பு இரட்டையர் போட்டியில், சுவிற்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், ஐக்கிய இராச்சியத்தின் ஜேமி மரே இணை, சீன தாய்பேயின் சான் ஹாவோ-சிங், அவுஸ்திரேலியாவின் மைக்கல் வீனஸ் இணையை, 6-1, 4-6, [10-8] என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திச் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .