2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிவர்பூலை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2018 மார்ச் 11 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்கள் செல்சி ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் நடைபெற்ற லிவர்பூலுடனான போட்டியில், கோல் காப்பாளர் டேவிட் டி கியாவிடமிருந்து பந்தை றொமேலு லுக்காக்கு தலையால் முட்டி மார்க்கஸ் றஷ்போர்ட்டிடம் வழங்க அவர் அதை போட்டியின் 14ஆவது நிமிடத்தில் கோலாக்க மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றது.

பின்னர், அடுத்த 10 நிமிடங்களில் மீண்டுமொரு தடவை டேவிட் டி கியாவிடமிருந்து வந்த பந்தை றொமேலு லுக்காக்கு ஜுவான் மாத்தாவுக்கு வழங்கியபோதும் அது மார்க்கஸ் றஷ்போர்ட்டிடம் செல்ல அவர் அதைக் கோலாக்க தமது முன்னிலையை மன்செஸ்டர் யுனைட்டெட் இரட்டிப்பாக்கிக் கொண்டது.

தொடர்ந்து, 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறும் வாய்ப்பு இருந்தபோதும் அலெக்ஸிஸ் சந்தேஸிடமிருந்து பெற்ற பந்தை கோல் கம்பத்துக்கு வெளியே ஜுவான் மாத்தா உதைந்திருந்தார்.

இரண்டாவது பாதியில், லிவர்பூலின் முன்கள வீரர் சாடியோ மனேயிடமிருந்து வந்த பந்தை தமது பகுதியிலிருந்து வெளியேற்ற முனைந்த மன்செஸ்டர் யுனைட்டெட்டின் எரிக் பெய்லி போட்டியின் 66ஆவது நிமிடத்தில் தமது கோல் கம்பத்துக்குள்ளேயே செலுத்த மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னிலையை ஒரு கோலாக லிவர்பூல் குறைத்தது.

எனினும், இதன் பின்னர் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. இப்போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றபோதும் போட்டியின் 32சதவீதமான நேரமே பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், கோல் கம்பத்தை நோக்கி இரண்டு உதைகளை மட்டுமே உதைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸ் அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, வில்லியன் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. கிறிஸ்டல் பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் வான் ஆன்கொல்ட் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .