2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கூப் டி லா லீக் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குய்ன்கம்ப் அணியுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 61ஆவது நிமிடத்தில் குய்ன்கம்ப் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை மார்க்கஸ் துராம் தவறவிட்டிருந்தார். இந்நிலையில், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலொன்றைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரர் நேமர், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த போட்டியில், போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்களிருக்கையில் குய்ன்கம்ப் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை யெனி நகபகோட்டோ கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதுடன், போட்டியின் இறுதிக் கணங்களில் வழங்கப்பட்ட பெனால்டியை மார்க்கஸ் துராம் கோலாக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

பரிஸ் ஸா ஜெர்மைனின் பெனால்டி பகுதிக்குள் அவ்வணியின் மார்கோ வெராட்டி வீழ்த்தப்பட்டபோதும் பெனால்டி வழங்கவில்லை என போட்டியின் இறுதி நிமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தநிலையில், அவ்வணியின் நேமர், எடின்சன் கவானி, மார்கோ வெராட்டி ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்தது.

இப்போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் தோல்வி எதையுமே தளுவாத பரிஸ் ஸா ஜெர்மைனின் பயணம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .