2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாரிய அனர்த்தங்களை மக்கள் எதிர்கொள்ளநேரிடும்

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தின் வெள்ளநீர் வழிந்தோடும் பகுதி அடைக்கப்பட்டுள்ளதனால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்களை அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளநேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

மழைகாலங்களில் மாங்கேணி பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், அது பிரதான வீதியூடாகவுள்ள கால்வாயூடாக கடலுக்கு செல்வதனால் ஓரளவு வெள்ள பாதிப்பு தடுக்கப்படுவதாகவும் ஆனால் கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியை சிலர் தங்களது நிலமென அடைத்துள்ளதனால், மழை காலத்தில் பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்கொள்ளநேரிடுமெனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

தமது பகுதிகளிலுள்ள அரச காணிகள் மாற்று இன சமூகத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்திலுள்ளவர்கள் மேற்கொள்வதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

தமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்ட காணிகள் இன்று பணத்திற்காக மாற்று இனங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலையேற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த, பகுதியில் காணி அபகரிப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் குறித்த பிரச்சினை தொடர்பில், யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த, பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன், வாகரை பிரதேசத்தில் பறிபோகும் காணி தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், இது தொடர்பில், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .