2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

களுவாஞ்சிகுடியில் பொதுமக்களுக்கான நடமாடும் சேவை

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ், சக்திவேல்)
 
'கடந்த காலத்தில் நீங்கள் அனுபவித்த துன்பங்கள் மீண்டும் ஏற்படாதவகையில் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பொறுப்பு உங்களிடமே உள்ளது. அதற்கான சல உதவிகளையும் செய்வதற்காகவே பொலிஸார் உள்ளனர்' என களுவாஞ்சிகுடி பிரதேச பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.விஜயபால தெரிவித்தார்.
 
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கோயில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான நடமாடும் சேவையின் ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு மேலும் உரையாற்றிய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர், 'உங்களுக்கு கடந்த கால இன்னலான சூழலுக்குச் செல்வதற்கு விருப்பம் இருக்கிறதா? கடந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். பொலிஸாரை நீங்கள் ஒரு விரோதியாகவே கடந்த காலங்களில் பார்த்தீர்கள். அவ்வாறான மனோபாவத்தை விட்டுவிடுங்கள். உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே நாங்கள் இருக்கிறோம்.
 
யுத்தம் நிறைவடைந்து முழுமையான பாதுகாப்பான சூழல் இன்னமும் உருவாகிவிடவில்லை. அதனை ஏற்படுத்துவதற்கான வேலைகளுக்கு மக்களாகிய நீங்கள் சகல விதத்திலும் உதவி செய்தல் வேண்டும். பொலிஸாராகிய எங்களுடன் ஒத்தழைக்கும் போதுதான் அனைத்துவிதமான விடயத்திலும் பாதுகாப்பான ஒரு சூழலை நாம் உருவாக்க முடியும்.
 
இந்த சுதந்திர நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவாக எல்லா திணைக்களங்கள், அலுவலகங்களையும் இணைத்து சேவையாற்றுவதற்கு ஒன்றிணைக்கக்கூடிய தன்மை பொலிஸாருக்கே உண்டு.
 
இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தப்படுவது உங்களுக்கான நன்மைகளை வழங்குவதற்காகவே. ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
 
நீங்கள் அனைவரும் உங்களுடன் இணைந்து செயற்படும்போதும் ஒத்துழைக்கும் போதும் நல்லதொரு சேவையை எங்களால் ஆற்றமுடியும். அதற்காக நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டவர்களா இருப்போம்.
 
இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திய களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு உரையாற்றுகையில், 'பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் கீழ், எமது பொலிஸ் பிரிவில் நடத்தப்படுகிற மூன்றாவது நடமாடும் சேவை இதுவாகும். இவ்வாறான நடமாடும் சேவைகளை உங்களுக்காகவே செய்து வருகிறோம். நீங்கள் அனைவரும் எங்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மூலமே இதன் முழுமையான பயனும் கிடைக்கும்' என்றார்.
 
இந்த நடமாடும் சேவையில், பொதுமக்களுக்கு நுளம்பு வலைகள், மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள், தென்னங்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
 
அத்துடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளும் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் அனைத்து பிரிவுகளும், போரதீவுபற்று பிரதேசபை, விவசாயப்பகுதி, அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பனவும் சேவைகளை வழங்கின.
 
இரத்ததான நிகழ்வுகளும் வைத்திய சேவைகளும் விளையாட்டுப் போட்டிகளும் வீதிப் போக்குவரத்து வகுப்புகள் மற்றும் இன்னோரன்ன சேவைகளும் இடம்பெற்றன.
 
இதில் வெல்லவெளி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி கருணாரத்ன, பளுகாமம் விசேட அதிரடிப்டை பொறுப்பதிகாரி அமில பண்டார, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினரின் இரத்தவங்கிப் பிரிவு, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .