2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சியை தடுக்குமாற

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர்  பிரிவின் எல்லைப்புற பிரதேசங்களில்   15,000 ஏக்கருக்கு மேற்பட்ட     காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு  மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் அனுப்பிவைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்தார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சைக்கொடி - சுவாமிமலை கிராம அலுவலகர் பிரிவு 135 சி பிரிவில்   கெவிழியாமடு, கோம்பஸ்தலாவ, புளுக்குணாவ, பன்சன்கல ஆகிய கிராமங்களிலுள்ள கால்நடைகளுக்குரிய மேய்ச்சல்த்தரை, வேளாண்மைக் காணிகள், மேட்டுநிலப் பயிர்செய்கைக் காணிகள், சிறிய காடுகள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் குளங்கள், நீர்நிலைகள்  அடங்கிய  பாரிய நிலப்பரப்பை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது. 

இந்நடவடிக்கையை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மேற்கொண்டதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (28௧1௨011) முற்பகல்  10 மணிக்கு  அம்பாறை மாவட்ட  கச்சேரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு  மட்டக்களப்பு  மாவட்ட செயலக அதிகாரிகளும் பட்டிப்பளை பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக பட்டிப்பளை  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  அமைப்புக்களும் அப்பகுதி மக்களும்  என்னிடம் முறையிட்டுள்ளனர்.   இப்பிரதேசத்தில்   இருவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒற்றுமையை இவ்வாறான நடவடிக்கைகள் நிச்சயம் சீர்குலைக்கும். அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளுக்குரிய மேய்சல்த்தரையும் மக்கள் வாழ்வதற்கான குடியிருப்புக் காணிகளும் இப்பகுதி தமிழ் மக்களுக்கு இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும். எனவே,    இப்பகுதித் தமிழ் மக்களின்    சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இச்செயல்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

இக்கடிதத்தின் பிரதிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட செயலாளர், பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .