2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுண்கடனுக்காக அனுமதி பெறவேண்டும்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நுண்கடன் வழங்கும்போது, பிரதேச செயலாளரினதும் மாவட்ட அரசாங்க அதிபரினதும் அனுமதியை  நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பெறவேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நுண்கடன் திட்டத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் அப்பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நுண்கடன் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்கு பல்வேறு வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நுண்கடன் வழங்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனங்கள் மாவட்ட அரசாங்க அதிபரினதும் பிரதேச செயலாளரினதும் அனுமதி  பெறவேண்டும்.

நுண்கடன்கள் வழங்கப்பட்டு அதிகளவான வட்டியை அறவிடுவதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமைக்கு காரணமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுண்கடன்கள் வழங்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. நுண்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் கடன்களை வழங்கி விட்டு வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடக்கூடாது. அவர்கள் கடன் வழங்கும்போதும் கடனை அறவிடும்போதும் நிறுவன அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும். கடன்களை வீடுகளுக்குச் சென்று அறவிடும்போது பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை  தவிர்க்கும்  பொருட்டு வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடக்கூடாது.

பாரிய வட்டிக்கு கடனை  நுண்கடன் நிறுவனங்கள் வழங்குவதால், மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடுகிறது.

சுயதொழில், தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தொழில் முயற்சி மேம்பாட்டுக்கு மாத்திரமே கடன் வழங்கவேண்டும். இதைப் பற்றி பரிசீலித்து கடன் வழங்குவது அவசியமாகும்' என்றார்.

இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன்,  கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், புதிய காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் சிலவற்றின் பிரதிநிதிகள்,  காத்தான்குடி உலமா சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .