2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நலனோம்புத்திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சமூகசேவைத் திணைக்களத்தின் நலனோம்புத்திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு  ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீராகேணி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலகப் பிரிவில் சமூகசேவைத் திணைக்களம் மற்றும் பொதுமக்களுக்கான நலனோம்புத்திட்டங்களை அமுல்படுத்தும் வெவ்வேறு திணைக்கள உத்தியோகஸ்தர்களை ஒருங்கிணைத்ததாக ஒரே இடத்தில் மக்களுக்கு விளக்கமளித்து அறிவூட்டும் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக சமூகசேவை உத்தியோகஸ்தர் சந்திரகலா கோணேஸ் தெரிவித்தார்.

நிகழ்வைத் ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா,  'கிராமங்கள் தோறும் மாதாந்தம் மக்களை விழிப்பூட்டுவதற்காக இத்தகைய அறிவூட்டல் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மக்கள் அபிவிருத்தியோடு இணைந்ததாக தமது வாழ்க்கை நிலைமைகளை மாற்றிக்கொண்டு எதிர்கால சவால்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்சமயம் போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு சீரழிவுகள் மக்களது வாழ்க்கையை பாழ்படுத்துகின்றன. இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களது வாழ்வை முன்னேற்றுவதற்காக அரசு பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி துரித முன்னேற்றத்தைக் காண வேண்டும்.' எனக் கூறினார்;.

இந்த நிகழ்வில் பொதுமக்களால் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

பாழடைந்து கிடக்கும் வீடுகள், டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்போர், போதைப்பொருள் பாவிப்போர் மற்றும் விற்பனை செய்வோர், பாடசாலை செல்லாத பிள்ளைகள், நெல் அரிசி ஆலைகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழல் சுற்றாடல் பாதிப்புக்கள் என்பன குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

பாடசாலை செல்லாத பிள்ளைகளைப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எஸ்.சிவலிங்கம், சமூகசேவை உத்தியோகஸ்தர் சந்திரகலா கோணேஸ், ரீ.ஜெயவாணி, சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் சபூஸ் பேகம், நிவாரண சகோதரி எஸ்.எல்.குறைஷா, பாத்திமா றிஹானா, உளவளத்துணை உதவியாளர் ஏ.ஆமினா, ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்ற தலைவர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mohamed rajeen Tuesday, 14 October 2014 05:10 PM

    இவ்வாறான சேவைகள் ஏறாவூரின் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவிலும்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .