2024 மே 02, வியாழக்கிழமை

‘சுற்றுலாத்துறையை டெங்கு தாக்கியுள்ளது’

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

சமகாலத்தில் நாட்டைப் பீடித்துள்ள டெங்குத் தாக்கம், வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத்துறையைத் தாக்கியுள்ளடிதென, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் பொது முகாமையாளர் கலாநிதி ஆர். ஞானசேகர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் உல்லாச விடுதியில் இன்று (11) இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர், ஆரம்ப உரை நிகழ்த்தினார்.

'உள்வாங்கல் வளர்ச்சிக்கான ஆற்றல்' எனும் தொனிப்பொருளில், அவுஸ்திரேலியன் உதவி நிறுவனத்தால் (Australian Aid) ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறையில், உல்லாசப் பயணத்துறையில் கவனம் செலுத்தி வரும் உல்லாச விடுதிகளின் முதலீட்டாளர்கள், அரச உள்ளூராட்சி நிருவாக அதிகாரிகள், துறை சார்ந்த விற்பன்னர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஆர். ஞானசேகர்,

“கிழக்கு மாகாணம், இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களை விட சுற்றுலாத்துறைக்கு அதிக வாய்ப்புள்ள பிரதேசமாக இருந்தபோதிலும், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் இல்லாமையின் காரணமாக, சுற்றுலாத்துறையில் மேம்பாட்டைக் காண முடியவில்லை.

"சம காலத்தில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல், டெங்கு ஆகும்.

"குறிப்பாக சமீப காலங்களுக்கு முன்னர் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைப் பீடித்த டெங்கு அச்சுறுத்தல், சுற்றுலாத்துறைக்கு மிகப் பிரபல்யமான இயற்கை எழில் நிறைந்த உலகிலேயே இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலையின் சுற்றுலாத்துறையையும் பாதித்துள்ளது.

"எனவே, சுற்றுலாத்துறையை அது எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து விடுவிப்பதன் மூலம், கிழக்கின் பொருளாதாரத்தை வளப்படுத்த முடியும். குறிப்பாக அதிகரித்த தொழில்வாய்ப்புகளை சுற்றுலாத்துத்துறைக்குள் உள்ளீர்த்து, வேலையற்ற இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் கொண்டு வர முடியும்.

“உள்ளூர் கைத்தொழில் உற்பத்தித் துறைக்கு உயிரூட்ட முடியும். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

“சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம், உள்ளுர் உற்பத்திக்கான மிகச் சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .