2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நினைவுத் தூபி அகற்றப்பட்டமைக்கு கிழக்கில் கண்டனங்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன், எப்.முபாரக் 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமைக்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம். அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது  படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. ஆகவே, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது” என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த, இலங்கை அரசை சில காலம் நடுங்க வைத்த, இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட ஜே.வி.பியினரை நம் நாட்டு மக்கள் நினைவு கூரலாம். அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைக்கலாம். ஆனால், நினைவுச் சின்னம் இருக்கக்கூடாதா என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வியெழுப்பி, கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஜே.வி.பியினருக்கான நினைவுச் சின்னங்கள், தென் பகுதி பல்கலைக்கழகங்களான வயம்ப, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதுவொன்றும் தவதாக தெரியாதமைக்கு காரணம் அவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

மேலும் “முள்ளிவாய்க்கால் அவலம், உலக வரலாறு காணாத ஓர் அவலம். முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் விடுதலைப்புலிகள் மாத்திரமல்ல. அரசாங்கத்தின் அறிவித்தலை நம்பி தாம், தமது குழந்தைகள், உறவுகளின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற மரண பயத்தில்  ஒன்றுகூடிய மக்கள் மரணமடைந்த அவலம். மரணமடைந்த உறவுகளை நினைவு கூருவது சர்வதேச சட்டங்களால் அங்கிகரிக்கப்பட்ட ஒன்று. நமது நாட்டில் அங்கிகரிக்கப்பட்டதே வரலாறு” என்றார்.

இதேவேளை, எமது வலிகள், வடுக்கள், பாரம்பரியம், போராட்டம், தேசியம் என்பவற்றை மறந்து அரசாங்கத்துக்கும், அதனோடு இணைந்தவர்களுக்கும் ஆதரவு வழங்கி, தங்களைத் தமிழர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ் விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளையும். பல்கலைக்கழக மாணவர்களையும், அதன் பணயாளர்களையும் நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியில் அரசு கைவைத்து அதன் இயலாமையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இனியும் இவ்வாறான பல விடயங்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் இருக்கக்கூடும். அவற்றைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் எம்முள் ஒற்றுமையுடன், தேசியம் சார்பான பற்று வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .