2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“நிலுவைக் கொடுப்பனவுடன் சம்பளத்தை வழங்கவும்”

Kogilavani   / 2017 ஜூன் 12 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

“ஆசிரியர் உதவியாளர்களாகிய எம்மை வைத்து அரசியல் செய்யாது, 4,000 ரூபாய் கொடுப்பனவை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, ஆசிரியர் உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,

“ஆசிரியர் உதவியாளர்களுகென அதிகரிக்கப்பட்ட 4,000 ரூபாய் கொடுப்பனவு மே மாதம் முதல் வழங்கப்படுமென்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தர். எனினும், மே மாத சம்பள பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆசிரியர் உதவியாளர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பான தனக்குரிய சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண அரசாங்கமே, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.

ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்தின் ஓரிரு கல்வி வலயங்களிலும், ஆசிரியர் உதவியாளர்களுக்கான பெப்ரவரி முதல் மே மாதம் வரையான நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டதாக, தெரியவருகிறது.

ஆனால், மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பல கல்வி வலயங்களில் சேவையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு, இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

குறிப்பாக நுவரெலியா கல்வி வலயத்தின் கணக்காளருடன் தொடர்புகொண்ட வினவியபோது, ஆசிரியர் உதவியாளர்களின் கொடுப்பனவுகள் தொடர்பாக, தனக்கு எவ்வித சுற்றறிக்கைகளும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் கொடுப்பனவுகள் துரிதகதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினர்.

ஆசிரியர் உதவியாளர்களாகிய நாம், கடந்த இரண்டு வருடங்களாக 6,000 ரூபாய் சம்பளத்துடனேயே, வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். எமக்கான சேவைகால பயிற்சியும் இன்னும் இழுபறி நிலையிலேயே, உள்ளது.

ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு செல்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று இரு மாதங்கள் கடந்த நிலையிலும்கூட, பயிற்சி நெறியை தொடர்வதற்கான அழைப்புக் கடிதங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையிலுள்ள கருத்து முரண்பாடுகளால் பாதிக்கப்படுவது ஆசிரியர் உதவியாளர்களே.

ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு செல்வது தொடர்பிலும் மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்களிடையே, இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
எனவே, ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் துரிதகதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் உதவியாளர்களாகிய எம்மை வைத்து, அரசியல் செய்ய முற்பட வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .