2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'10,000 பசுக்கள் இறக்குதி செய்யப்படும்'

Kogilavani   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாட்டில் பால் உற்பத்தி, சுயதொழில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டிலிருந்து 10,000 பசுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ தெவித்தார்.

ஹட்டன், காமினிபுரவில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

"கிராம அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் என்ற அடிப்படையில், தோட்டப்பகுதிகள், கிராமப்பகுதிகளில் பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தலா பத்துப் பேரை தெரிவுசெய்து, அவர்களை சுயதொழிலில் ஊக்குவிக்கவே, பசுக்கள் வழங்கப்படவுள்ளன.

"பசுக்களைப் பெற்றுக்கொண்டவர்கள், சரியான முறையில் பால் உற்பத்தியில் ஈடுபட்டால், அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே பால் பண்ணைகளும் விற்பனை நிலையங்களும் அமைத்துக் கொடுக்கப்படும்" என்றார்.

"இன்று நாட்டில், தொழில்வாய்ப்புப் பிரச்சினை அதிகளவில் உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய, பாரிய வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

"கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், தொழில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிகின்றார்கள். இவ்வாறானவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டப்பகுதி, கிராமப்பகுதிகளில், தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

"இத்தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக மரவேலைகள், கட்டட வேலைகள் போன்ற தொழில்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டமானது, மாவட்ட, பிரதேச வாரியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

"மேற்படி தொழில்களில் பயிற்சி பெற்றவர்கள், ஹம்பாந்தோட்டை, கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டட மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.

"தோட்டம், கிராமப்பகுதி என்ற வேறுபாடுகளை நீக்கி, கிராமம் என்ற முறைமைக்கமைய அபிவிருத்தியை முன்னெடுக்க, அரசாங்கம், தாராள மனதுடன் உதவிகளை செய்து வருகின்றது. ஆனால், உதவிகளைப் பெற்றுக்கொள்பவர்கள், அதனை வீண்விரயம் செய்து வருவது கவலையளிக்கின்றது.

"எனவே, அரசாங்கத்தின் மூலமாக கிடைக்கும் உதவிகளையும் சலுகைகளையும், பிரயோசனமாகப் பயன்படுத்த வேண்டும்" என அவர் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .