2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மனித அவலத்தில் அரசியல் நடத்த முடியாது அனுமதிக்க முடியாது – திகாம்பரம் எம்.பி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொருளாதார ரீதியாக எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் உயிரும் உறவுகளும் இழக்கப்படுகின்றபோது மனித உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மாறாக மக்களின் அவலத்தில் அரசியல் நடத்தவும் அரசியல் ராஜதந்திரத்திற்கு துணைபோகவும் அனுமதிக்க முடியாது என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமாக பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'அண்மைய நாட்களில் இலங்கை அரசியலில் ஜனாதிபதியின் ஒக்ஸ்போட் யூனியன் உரை ரத்துச் செய்யப்பட்டமை மற்றும் லன்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்து பல்வேறு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி வருகின்றனர்.

ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் எனது கருத்துக்களை அறிக்கையாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தேன்.

அதன் உள்ளம்சங்களை தெளிவாக வாசித்து அறியாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மகிழ்விப்பதற்காக கருத்து வெளியிட்டு வருவதாக தமது அரசியல் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
 
எதிர்ப்பு அரசியலை மட்டுமே நம்பி அரசியல் நடாத்தும் இவர் அதன் மூலம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன என்கின்ற கேள்வி மக்களிடத்தில் உள்ளது என்பதை இவர் மறந்து விடக்கூடாது.
நாம் ஜனாதிபதியை மகிழ்விக்க வேண்டுமெனில் அன்று ஜனாதிபதி தேர்தலின்போதே அவருடன் இணைந்து செயற்பட்டிருக்க முடியும்.

எனினும் ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்த சந்தர்ப்பம் ஒன்றில் நாம் எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கே எமது ஆதரவை வழங்கியிருந்தோம் என நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்போது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி நிறுத்தப்படுவாரெனில் தான் ஆதரிக்க போவதில்லை என முழங்கியவர் பின்னர் முன்னாள் இராணுவத்தளபதியின் உரைப்பெயர்ப்பாளராக நாடு முழுவதும் அவருக்காக பிரசாரம் செய்தார்.

அந்த இராணுவத்தளபதி யுத்தத்துக்கு தலைமை தாங்கியவர் என்றவகையில் தான் முன்வைத்த கருத்தினை கொண்டிருந்த இவரினால் ஏன் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியவில்லை?

யுத்தம் இந்த நாட்டில் உக்கிரமடைந்திருந்த காலத்தில் நாம் எதிரணியில் இருந்து குரல் கொடுக்க தவறவில்லை. அந்த நேரத்திலும் அரசாங்கத்தில் எத்தனையோ வடக்கு கிழக்கு, மலையக, முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.
நாம் எமக்கு வாக்களித்த மக்களுக்காக ஆற்றவேண்டிய பணிகள் உண்டு.

அதற்கு அப்பால் எமது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும்போது ஜனநாயக ரீதியாக எதிர்த்து குரல் கொடுத்தல் வேண்டும். அதைவிடுத்து மக்களின் மனதில் உள்ள அதிருப்தி நிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் அறிக்கைகளை மாற்றிக்கொண்டு எதிர்ப்பு அரசியலை மூலதனமாக்குவதன் மூலம் தொடர்ந்து மக்களை பலிக்கடாவாக்க முனையக் கூடாது.

அத்தகைய எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளினால் மேற்குலக நாடுகளின் பட்டங்களும் பரிசுகளும் அரசியல் தலைவர்களின் அலுமாரிகளை அலங்கரிக்கலாமே தவிர மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை.

மக்களிடம் வாக்குகளை பெற்றுக்கொண்டு அந்த மக்களுக்கு உரிய சேவைகளைப் பெற்றுக்கொடுக்காது எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அரசியலை மட்டும் முன்னெடுத்தவர்களை மக்கள் தமது வாக்குகளைக்கொண்டு புறக்கணித்துள்ளார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அத்துடன் அரசியல் தூரநோக்கற்ற விதத்தில் தேர்தல்களின்போது வேட்பாளர்களை நிறுத்தி சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவதற்கு காரணமானவர்கள் தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீது காழ்ப்புணர்வுடன் கருத்துக்கூறுவது அநாகரீகமானதாகும்.
 
ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தானும் கண்டிப்பதாக கூறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதற்கான காரணங்களை தனது அபிமான ஐக்கிய தேசிய கட்சிக்கு கைகொடுக்கம் விதத்தில் திரிபுபடுத்தி நியாக்யம் கற்பிக்க முயல்கின்றார்.

நான் எனது அறிக்கையில் கூறியுள்ள விடயங்கள் யதார்த்தபூர்வமானதாகும். அதில் எனது தரப்பு வாதங்களை தர்க்க ரீதியாக தெளிவுபடுத்தியுள்ளேன். மீண்டும் இன முறுகல் நிலை வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்து உள்ளேன்.

ஓரிரு படைவீரர்களின் இறப்புக்களுக்கே பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்த இன வன் முறைச்செயல்கள் அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நாட்களில் நிகழ்வதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அதற்கு ஜனநாயக ரீதியாக தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தமையும் ஒரு காரணம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமது மக்களின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மக்களின் உழைப்பும் பொருள் இழப்புக்களும் விலைமதிக்க முடியாததது என்பது எந்தளவுக்கு உண்மையோ அதனைவிட இங்கே நேரடியாக யுத்தத்தில் மக்கள் அனுபவித்த உயிரிழப்புகள் , உளவியல் பாதிப்புகள் கணக்கிட முடியாததது. பொருளாதார ரீதியாக எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் உயிரும் உறவுகளும் இழக்கப்படுகின்றபோது மனித உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மக்களின் அவலத்தில் அரசியல் நடாத்தவும் அரசியல் ராஜதந்திரத்திற்கு துணைபோகவும் அனுமதிக்கமுடியாது.
 
 
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்தான் தாம் அரசியல் அறிக்கையுடன் வெளியே வருவதற்கும் சிலர் அகதி போர்வையில் வெளியே போவதற்கும் பொருத்தமானது என நம்பும் சிலரினால் மட்டுமே எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டம் ஊக்குவிக்கப்படும்.

அதைவிடுத்து ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தருணங்களில் எமது எதிர்ப்பை தெரிவித்து அதேவேளை நமது உரிமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் ஜனநாயக ரீதியாக இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே சாதுரியமான அரசியல் முன்னெடுப்பாக இருக்க முடியும் என நாம் கடந்த கால பெறபேறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • acord4 Sunday, 12 December 2010 08:49 AM

    ஜனாதிபதி உடன் அன்று சேர்ந்து தேர்தலில் நின்றால் இப்ப முகவரி இல்லை.இது பச்சை பிள்ளைக்கும் தெரியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .