2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா ’பிச்சை கேட்காது; தட்டிக் கேட்கும்’

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைக் கோரி, முதலாளிமார் சம்மேளனத்திடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிச்சையெடுக்கப்போவது இல்லையெனத் தெரிவிக்கும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், மாறாக தட்டிக்கேட்டு, சம்பளத்தையும் இதர உரிமைகளையும் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய உரிமைகளைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தோட்டத் தொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் வழிநடத்துகின்றனர் எனவும், இதற்கெல்லாம் காங்கிரஸ் அஞ்சப்போவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கந்தப்பளையில் அமைந்துள்ள தவிசாளரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில், நேற்று (10) காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தொழிற்சங்கக் கூட்டமைப்பு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று பிரதான தரப்புகள் மாத்திரமே, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்பந்தம் கையெழுத்திடவும் தகுதி பெற்றவர்கள் என்று குறிப்பிட்டார்.

"இந்த நிலையில், தகுதியற்ற ஏனைய கட்சிகள், ஒப்பந்தத்தின் ஊடாக, நியாயமான சம்பளம், இதர உரிமைகள் தொடர்பில் சிறந்த ஆலோசனைகளையும், தொழிலாளர்கள் நலன் குறித்த நியாயமான விவரங்களையும் முன்வைத்து, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் செயற்பட வேண்டும்.

"மாறாக, நடைபெறவிருக்கும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைக் குழப்பி, அரசியல் குளிர்காய நினைப்பது, நியாயமான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக அமையும் என்பதை இவர்கள் உணரவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வீடு, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவை முக்கியம் என, தற்போது மேடைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்த அவர், தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தச் செய்யப்படும் கூட்டு ஒப்பந்தத்துக்கு மாத்திரம், தொழிலாளர் காங்கிரஸைக் குறிவைப்பது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

"தொழிலாளர்களின் சம்பள உயர்வை இ.தொ.கா பெற்றுக் கொடுத்துவிட்டால், பெருந்தோட்ட மக்களிடத்தில் சென்று அரசியல் முன்னெடுக்க முடியாது என்ற பயமா? இந்த தடுமாற்றம் கொண்டவர்களே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை முறையாக முன்னெடுத்துச் செல்லவிடாது குழப்பியும், குழம்பியும் வருகின்றார்கள்" என்று தெரிவித்த அவர், "காங்கிரஸ் சக்தியை, தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இருக்கும் வரையும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் பெயர் இருக்கும் வரையும் மழுங்கடிக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .