2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிள்ளை பராமரிப்பு நிலையங்களை ‘சிறுவர் விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரவும்’

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பெருந்தோட்டங்களில் உள்ள பிள்ளை பராமரிப்பு நிலையங்களை, சிறுவர் விவகார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மலையக  சமூகத்தை தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டாமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.   

கடை காரியாலய ஊழியர்கள் சட்டம், மற்றும் மகப்பேற்று நலன்கள் சட்டம் என்பவற்றின் திருத்தங்களுக்கான விவாதம் நாடாளுமன்றில், நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.   

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,   

மலையக பெருந்தோட்டங்களில், தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பிள்ளைப்பராமரிப்பு நிலையங்களானது, எந்த ஒரு நியமமும் அற்ற நிலையிலேயே இயக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், பெரும்பாலானத் தோட்டங்களிலுள்ள பிள்ளைப்பராமரிப்பு நிலையங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி இந்நிலையங்களுக்கு பொறுப்பாக உள்ள ஊழியர்கள் எவ்விதத் தகைமையும் பயிற்சியும் அற்றவர்களாகவே உள்ளனரெனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக சிறுவர் விவகார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் அதனை தங்களுக்குரிய ஒரு விடயமாக பார்ப்பதும் இல்லை என்றும் சாடினார்.   

இந்த நிலைமையை மாற்றி, பெருந்தோட்டங்களில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களைச் சிறுவர் விவகார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு கோரிய அவர், மலையகச் சமூகத்தைத் தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டாமென்றும் தெரிவித்தார்.   

இங்கு மேலும் கூறிய அவர்,   

“கடை காரியாலய ஊழியர் சட்டம், எமது நாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆனால் அந்தச் சட்டம் எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. கடை காரியாலய ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்குதல், அவர்களின் வேலை நேரம், விடுமுறைகள் மற்றும் வேலை சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இச்சட்டம் கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.   

“சட்டம் நன்றாக இருக்கின்றது. அதன் திருத்தமும் நன்றாக இருக்கின்றது. ஆனால், சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டாலே, இதன் பெறுபேற்றை நாம் அடைந்துகொள்ள முடியும். எனவே, சட்டத்தில் மற்றும் திருத்தத்தில் காட்டுகின்ற கவனத்துக்கு அதிகமாக சட்டத்தை நடைமுறை படுத்துவதில் கவனம் காட்ட வேண்டும். அதன் போதே நாம் எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்துகொள்ள முடியும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .