2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு எதிராக போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அசமந்தப் போக்கைக் கண்டித்து, பிரதேச மக்கள், போடைஸ் தொழிற்சாலைக்கு முன்பாகவும் ஹட்டன்-டயகம பிரதான வீதியையும் மறித்தும், நேற்று (7) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்பட்டனர்.
இலங்கைத் தோட்டச் சேவையாளர்கள் சங்கத்தின் ஹட்டன் கிளை காரியாலய உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போடைஸ் தோட்டத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரை, அதேத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கியுள்ளாரெனவும் குறித்த நபரை, உடனடியாகக் கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தில் பணிப்புரியாத அதேத் தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தோட்டத்துக்கு உரித்தான காணியை துப்பரவு செய்தபோது, தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் அதனைத் தட்டிக்கேட்டுள்ளார்.

இதன்போது இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், வெளிக்கள உத்தியோகத்தர் குறித்த நபரால் தாக்கப்பட்டாரென, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை மாலை(4) முறைப்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டு நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரை இதுவரை கைதுசெய்யவில்லை எனச் சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள், முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

எனவே, பொலிஸாரின் அசமந்தப்போக்கை கண்டித்தும் குறித்த நபரை உடனடியாகக் கைதுசெய்யுமாறும் கோரியே, தொழிலாளர்கள், நேற்று (7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .