2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்: அமைச்சர் டக்ளஸ்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டுவதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.
 
யாழ். குடாநாட்டின் வடபகுதி கடற்பரப்பினுள் நுழைந்து தொழில் செய்தார்கள் என்ற காரணத்தினால் நூற்றியாறு (106) தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை தமிழ் மீனவர்களால் பருத்தித்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் வசமிருந்த பதினெட்டு இழுவைப் படகுகளும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அவைகள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
 
இலங்கை கடல் எல்லையினுள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களை சூறையாடிச் செல்வதுடன் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வலைகளையும் சேதமாக்கிச் செல்வதாக நீண்டகாலமாக வடபகுதி தமிழ் மீனவர்கள் குற்றச்சாட்டி வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வடபகுதி பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றையதினம் வழமைபோலவே வடபகுதி கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் அங்கு மீன்பிடித்ததுடன் தமது வலைகளையும் சேதமாக்கியதை அறிந்த வடமராட்சி கடற்றொழிலாளர்கள் தமது படகுகளில் இன்று பிற்பகல் திரண்டு சென்று நியாயம் கேட்டபோது ஏற்பட்ட தகராறை அடுத்து பருத்தித்துறை மீனவர்கள் இந்திய கடற்றொழிலாளர்களை அவர்களது ரோலர்களுடன் பருத்தித்துறை கடற்கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
 
இச்சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தகவலறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். அங்கிருந்தவாறே கடற்படைத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடன் அமைச்சர் தொடர்புகொண்ட நிலையில் வடபகுதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி அமரக்கோன் மற்றும் வடபிராந்திய பதில் கடற்படைக் கட்டளைத் தளபதி கொமடோர் என்.கே.டி.நாணயக்கார ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
 
இச்சமயம் இந்திய கடற்றொழிலாளர்களினால் தமக்கு ஏற்பட்ட நீண்டகால பாதிப்புக்களை எடுத்துக்கூறிய கடற்றொழில் சமாசத்தலைவர் எமிலியாம்பிள்ளை மற்றும் கடற்றொழில் சங்கத் தலைவர் அருள்தாஸ் ஆகியோர் தமக்கு உரிய நியாயத்தை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
 
கைதுசெய்யப்பட்டுள்ள நாகபட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேற்படி நூற்றியாறு தமிழக கடற்றொழிலாளர்களும் நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமராட்சி கடற்றொழிலாளர்களுடனும் கடற்றொழில் சமாச பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இச்சமயம் வடபகுதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி அமரக்கோனும் உடனிருந்தார். இந்நிலையில் தாம் வடபகுதி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
 
மற்றொருபுறம் ஒரேசமயம் நூற்றியாறு பேர் பருத்தித்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர்களை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு மற்றும் அத்;தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு வடமராட்சி கடற்றொழில் சமாசத்தினர் முன்வந்துள்ளனர். இதனை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டியதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
 
இதேவேளை தமது கடல் எல்லை பரப்பினுள் நுழைந்து இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதால் தமக்கு உருவாகும் தொழில் ரீதியான பாதிப்பு குறித்து வடபகுதி தமிழ் மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஏற்கனவே பலதடவைகள் முறையிட்டிருந்தனர். இவ்விடயம் குறித்த வடபகுதி தமிழ் மீனவர்களின் நியாயங்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவ சமாசத்திற்கும் இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர் சமாசத்திற்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்சமயம் பருத்தித்துறை கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பதினெட்டு இந்திய இழுவைப் படகுகளுக்கும் இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • chris Wednesday, 16 February 2011 10:43 PM

    இந்தியாவே, இலங்கை இப்படி இருக்க நீயும் ஒரு காரணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .