2024 மே 08, புதன்கிழமை

வைத்தியத்துறை சார்ந்த உயர்மட்ட கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் வட மாகாண சபையின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை போன்றவற்றின் தேவைகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி ரவீந்திர ருபேரு, மேலதிக செயலாளர் மஹீபால ஹேரத், துறை சார்ந்த பணிப்பாளர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா, வைத்திய கலாநிதி ரவிராஜ் உட்பட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது தாதிய உத்தியோகஸ்தர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருந்தாளர்கள், ஏனைய துறை சார்ந்த நிபுணர்கள், சுகாதார உதவியாளர்கள், வைத்தியர்கள், குடும்ப சுகாதார உத்தியோகஸ்தர்கள் போன்றவர்களது பற்றாக்குறை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

அண்மையில் நடந்து முடிந்த தாதியர் மாணவர்களுக்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 400 மாணவர்களுக்கு யாழ் தாதியர் கல்விக் கல்லூரியில் பயிற்சியளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.

மருந்தாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது ஐம்பது மருந்து கலவையாளர்களுக்கு விஷேட பயிற்சி வழங்கப்பட்டு அவர்களை உள்ளக நோயாளர் பிரிவுகளிலுள்ள மருந்தகங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

புதிதாக உள்ளக பயிற்சி முடித்து வெளியேறும் வைத்தியர்களில் 28 வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கும் 24 பேரை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்கள் எழுபது பேருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் கதிர் படவியல் சிகிச்சை நிபுணர் மற்றும் இழைய நோயியல் சிகிச்சை நிபுணர்களை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் தனக்கு கிடைக்கும் 14 அம்பியூலன்ஸ் வண்டிகளை தற்போதைக்கு மாற்று ஏற்பாடாக போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார். வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான விடுதிகளை அமைப்பதற்கு 2012ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் முன்னுரிமை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கதிர் படவியல் அலகு ஒன்றை நிர்மாணிப்பதற்கு சுவீடன் நாட்டு செஞ்சிலுவை சங்கம் இணங்கியுள்ளது. இது சம்பந்தமான கோரிக்கைகளை சுகாதார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்குமாறு சுகாதார பணிப்பாளரை சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X