2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குட்டி ஜப்பானாக வடக்கு மாறும்: டக்ளஸ்

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் வடக்கை குட்டி ஜப்பானாக மாற்றுவோம். அதுவே எமது நோக்கமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக  கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினர் அந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வடபகுதி மக்களின் வாழ்க்கையை இன்னும் பல மடங்கு உயர்த்துவதுடன், ஒரு சுதந்திரமான செயற்பாட்டினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

யாழ். மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் இன்று சுதந்திரமாக செயற்படுகின்றனர். அந்த சுதந்திரத்திற்கு இன்னும் பல மடங்கு அர்த்தம் கற்பிக்கவேண்டுமாயின் இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றியீட்டவேண்டும்;. அதேநேரத்தில் அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அது தொடர்பாக அமைச்சரவையில் பல தடவைகள் கலந்துரையாடி இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார்.

எமது அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக, ஏற்கெனவே கூறப்பட்டு வந்த 13 ஆவது திருத்த சட்டத்தினை ஆரம்பமாக கொண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், அதை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் சிபாரிசுக்கு இந்த விடயங்கள் விடப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்;க்கட்சிகள் பங்கு பற்றவில்லை. எதிர்க்கட்சிகள் பங்குபற்றாத காரணத்தினாவும்;, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் கட்சிகளுக்கு இந்த பிரச்சினைகளை தீர்க்க விரும்பம் இல்லாத காரணத்தினாலும், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கலந்து கொள்வார்களாயிருந்தால், விரைவாக இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று நம்புகின்றேன் என்றார்.

எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சியினர் வந்தாலும் வராவிட்டாலும், எங்களின் பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வினை காண்போம். அது எமது மக்களுக்கு கூடிய நம்பிக்கையையும், உற்சாகத்தினையும் கொடுக்குமென்று நம்புகின்றேன். பிரச்சினைகளை தீர்க்க விரும்பாதவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளை, மக்கள் பொருட்படுத்த கூடாதென்றும் அவர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், காணி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றேன். அமைச்சரவை மற்றும் படைத்தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளேன். அதன் விவகாரத்தை மீள் பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள் அந்தவகையில், எங்கள் மக்களின் காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க முடியும் என்பதுடன் காணி விடுவிப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் சொன்னார்.

You May Also Like

  Comments - 0

  • jeyarajah Thursday, 01 August 2013 03:24 AM

    அமைச்சர் அவர்களே... இலங்கை ஒரு குட்டி சிங்கப்பூர். யாழ்ப்பாணம் அதில் ஒரு குட்டி ஜப்பான். காணி பற்றி கன காலமாகவே கதைத்துக் கொண்டே இருக்கின்றீர். மத்தியில் நல்ல கூட்டாட்சி, ஆனால் மாநிலத்தில்தான் சுய ஆட்சி இல்லை. எமது நிலத்தை சுடு காடாக்கும் முயற்சியில் சம்பிக்க இறங்கியுள்ளார். அவருக்கு யாழ்ப்பாணத்தை ஒரு முறையாவது கூட்டி வந்து காட்டும்...

    Reply : 0       0

    Ash Thursday, 01 August 2013 05:13 AM

    வெற்றி பெறவில்லையென்றால்....?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .