2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அழைப்பாணை

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 13 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண பிரதம செயலாளரை நாளை (14) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று (13) அழைப்பாணை உத்தரவு வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பக் கோரலை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போதே எதிர் மனுதாரரான பிரதம செயலாளரை மன்றில் முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (13) கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அண்மையில் பத்திரிகை ஊடாக விண்ணப்பங்கோரல் விளம்பரத்தை வெளியிட்டார்.

பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதென எனக் குறிப்பிட்டு யாழ்.தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பக்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதனையும் இடைநிறுத்திவைக்கும் இடைக்காலத் தடையை வழங்க வேண்டும் என மனுதாரரால் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன், இடைக்காலத் தடை தொடர்பான மன்றின் கட்டளை நாளை  வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .