2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தங்கொட்டுவையில் போலி கச்சேரி சுற்றி வளைப்பு; 4 பேர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜுட் சமந்த)

தங்கொட்டுவை பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றினைச் சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கிருந்து பல்வேறு சட்டவிரோத ஆவணங்களுடன் இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாராவில பிரதேசத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை மறித்து அதிலிருந்த பெண்கள் இருவரைப் சோதனைக்குட்படுத்திய மாராவில பொலிஸார் அப்பெண்களிடமிருந்த போலியாக தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை மற்றும்
போலியாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் காணி உறுதி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இப்பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினையடுத்தே குறித்த போலி கச்சேரி பற்றிய தகவல்களைப் பெற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கச்சேரியினைச் சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்து, கணினி, அச்சு இயந்திரம் (பிரிண்டர்)  போலியாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காணி உறுதிப்பத்திரங்கள்,  பரீட்சை முடிவுப் பத்திரங்கள், இரண்டு கடவுச்சீட்டுக்கள், பிறப்புச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைகள்,  ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் மற்றும் கல்கிஸ்ஸை காணிப்பதிவு ஆணையாளருக்குரிய இறப்பர் முத்திரைகள், சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் கடிதத்தலைப்பிலான கடிதம்,  பல்வேறு இறப்பர் முத்திரைகள் ஆகியவற்றுடன் போலி முத்திரைகள் ஆறையும்  கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் மற்றும் வென்னப்புவ பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்களுடன் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கொட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இப்போலி கச்சேரியை நடத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய அடையாள அட்டை ஒன்றைத் தயாரிப்பதற்கு சுமார் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரையில் அறவிட்டதுடன், ஏனைய ஆவணங்களுக்கான கட்டணங்களை அவரரவரின் தகுதிக்கு ஏற்ப அறவிட்டதாக சந்தேக நபர்கள் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .