2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செலான் வங்கி 43% இலாப அதிகரிப்பை பதிவு செய்கின்றது

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கியானது 2015 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த 6 மாதங்களில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 2,579 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம், அரையாண்டு காலப் பகுதியில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருக்கின்றது. இந்த அரையாண்டு காலப்பகுதியில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 1,740 மில்லியனாக காணப்பட்டது. 2014ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்த ரூபா 1,212 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது 43% அதிகரிப்பாக  காணப்படுகின்றது.  

காலாண்டுக்கான (2015 இன் 2ஆம் காலாண்டுக்கான) வரிக்குப் பின்னரான இலாபமானது, ரூபா 1,089 மில்லியனாக பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த வருடத்தின் இதே 3 காலப் பகுதியில் செலான் வங்கி பெற்றுக் கொண்ட ரூபா 698 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 56% அதிகரிப்பாகவும் காணப்படுகின்றது. 

30 ஜூன் 2015 இல் முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூபா 5.16 பில்லியனில் இருந்து ரூபா 5.83 பில்லியனாக 13% இனால் அதிகரித்துள்ளது. ரூபா 1,055 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் ரூபா 1,191 மில்லியனாக 13% இனால் அதிகரித்திருக்கின்றது. கடந்த சில வருடங்களாக செலான் வங்கி அடையப் பெற்ற திடமான வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியான தன்மையை வெளிப்படுத்துவதாக இது காணப்படுகின்றது.

ரூபா 155 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த செலான் வங்கியின் தேறிய முற்பண தளத்தின் பெறுமதியானது 2015இன் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில் ரூபா 162.7 பில்லியனாக அதிகரித்தது. அதேவேளை வைப்புத் தளமானது ரூபா 185.9 பில்லியனில் இருந்து, ரூபா 190.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2015 ஜூன் மாத இறுதியில் செலான் வங்கியின் குறைந்த செலவிலான வைப்புத் தளமானது (CASA) 38% ஆக உயர்ந்த நிலையில் காணப்பட்டது. 

செயற்றிறன் வாய்ந்த மீள் அறவீடு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளின் பலனாக, தனது சொத்துத் தரத்தை மேம்படுத்துவதற்கு வங்கியினால் முடிந்துள்ளது. இதன் காரணமாக, 2014 இன் டிசம்பரில் 7.69% ஆக காணப்பட்ட தேறிய செயற்படா சொத்துக்களின் (NPA) பெறுமதியை (IIS இன் தேறிய பெறுமதி), 2015 ஜூன் மாத இறுதியில் 6.53% ஆக குறைப்பதற்கு செலான் வங்கிக்கு இயலுமாகியுள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்த - மையப்படுத்தப்பட்ட, நிலைபேறான மற்றும் செயற்றிறன் வாய்ந்த மீள் அறவீட்டு முயற்சிகளின் ஊடாக தன்னுடைய சொத்து தரத்தை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்வதற்கு  செலான் வங்கியினால் முடிந்திருக்கின்றது. 

செலான் வங்கி தனது 4 வருட (2012 – 2016) 'மூலோபாய திட்டத்தை' அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இத்திட்டமானது முற்பணம்/ வைப்பு அதிகரிப்பு, கிளை விரிவாக்கம், வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தல், ஊழியர் அபிவிருத்தி, செயற்படா சொத்துக்களை (NPA) குறைத்தல், கிரயக் கட்டுப்பாடு, புதிய உற்பத்தி அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, பங்குதாரர்களின் பெறுமதி போன்ற பல விடயங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை செலுத்துகின்றது. வசதி குறைந்த பாடசாலைகளில் 100 நூலகங்களை திறந்து வைப்பதையும் இந்த மூலோபாய திட்டம் குறித்துரைத்துள்ளது. அந்தவகையில் 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வங்கியினால் இவ்வாறான 70 பாடசாலை நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. 


வாடிக்கையாளர்களின் சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கிளை இடம் மாற்றம் மற்றும் புதுப்பொலிவூட்டல் செயற்றிட்டமும் 2015இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் முழு முயற்சியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. 2015 ஜூன் மாத இறுதியில் இருந்தபடி, வங்கியின் 75% ஆன கிளை வலையமைப்பு புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளது. 2015 ஜூன் 30ஆம் திகதியன்று இருந்தபடி செலான் வங்கியின் சேவை நிலைய வலையமைப்பானது 159 கிளைகள், 181 ATM மையங்கள் மற்றும் 93 மாணவர் சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. 

2015 இன் இரண்டாம் காலாண்டு இறுதியில் வங்கியின் 'மொத்த மூலதன நிறைவு வீதம்' 13.74% ஆக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. இத்துறையின் ஒழுங்குபடுத்துனரால் வரையறை செய்யப்பட்டிருக்கும் மட்டத்தை விடவும் இது மிகவும் அதிகமானதாகும். 2015 ஜூலை மாதத்தில் 'பிட்ச்' (Fitch) ஆனது 'நிலைமாறாத' கண்ணோட்டத்துடன் செலான் வங்கிக்கு 'A-lka' தரப்படுத்தலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. 

செலான் வங்கி இவ்வாறான சிறந்த தொழிற்பாடுகளை மேற்கொண்டதன் பயனாக, 2015 இன் இரண்டாம் காலாண்டில் பங்கொன்றிற்கான உழைப்பு ரூபா 5.04 ஆக காணப்பட்டதுடன், (வரிக்கு முன்னரான இலாபத்தில்) சொத்துக்கள் மீதான வருமானம் மற்றும் பங்குரிமை மீதான வருமானம் ஆகியவை முறையே 2.03% ஆகவும் 14.52% ஆகவும் உயர்ந்த மட்டத்தில் பதிவாகியது. அதேவேளை, 2015 ஜூன் 30ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதியானது ரூபா 71.48 ஆக (குழுமம் ரூபா 74.88) காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .