2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காப்புறுதி பெறும் வாய்ப்பை இழந்த விவசாயிகள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 18 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள நெற்செய்கை அழிவுக்கு, பயிரழிவுக் காப்புறுதி செய்யாத 10, 786 விவசாயிகள், 27, 425.5 ஏக்கருக்கான, 287,901,750 ரூபாய் காப்புறுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

தொடரும் வரட்சியால், நெற் செய்கைகள் முற்றாக அழிவடைந்த நிலையில், விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இந்நட்டத்தை ஈடுசெய்யமுடியாத நிலையில், வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்தியஅரசின் விவசாய அமைச்சின் கீழ் உள்ள கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் “வரும் முன் காப்போம்” காப்புறுதித் திட்டத்தில், 10,935 விவசாயிகளில், வெறும் 149 பேரே இணைந்துள்ளனர்.

காப்புறுதி செய்த 149 விவசாயிகளின் அழிவுக்குள்ளான 460.5 ஏக்கர் பயிரழிவுக்கு, இழப்பீட்டுத் தொகையாக, 4,877,660 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் பயிரழிவுக்கு ஏற்ப, சராசரியாக, ஏக்கருக்கு 10, 500 ரூபாய் வீதம், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பில், கமநலஅபிவிருத்தித் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். புனிதகுமார் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில், வரட்சியால், நெற்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது. இதனால், பல இலட்சம் ரூபாய் நட்டத்தை விவசாயிகள் எதிர்கொண்டதுடன் வாழ்வாதார தொழில் முயற்சிகள் இன்றி வறுமையுடன் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகளும் கமத்தொழில் மற்றும் கமநலக்காப்புறுதி சபையின் அதிகாரிகளும், விவசாயிகள் மத்தியில் அரசாங்க காப்புறுதி தொடர்பாக பல தடவைகள் அறிவுறுத்தியபோதும், அதனை பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவனத்தில் கொள்ளாமையால், பல இலட்சம் ரூபாய் காப்புறுதிப் பணத்தை, இழப்பீட்டுத் தொகையாக பெறும் வாய்ப்பை இழந்து விட்டனர்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .