2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இராணுவ நடைமுறைபோல் சிவில்நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது: சுரேஷ் எம்.பி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா திடீர் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டமை ஏற்புடையது அல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கல்விப் பணிப்பாளரின் பணி இடமாற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

வடமாகாண சிவில் நிர்வாகச் செயற்பாடுகள், இராணுவ நிர்வாகச் செயற்பாடுகள்போன்றே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர்க்காலத்தில் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றிய அதிகாரிகள் போதிய காரணங்கள் இன்றி இடைநிறுத்தப்படுகின்றமை அவர்களை மிகுந்த மன உழைச்சலுக்கு உட்படுத்துவதுடன், ஏனைய நிர்வாகச் செயற்பாடுகளையும் இடையூறுக்கு உட்படுத்துகின்றது. நடைபெற்ற வன்னிப் போரின் இறுதி காலப்பகுதியில் தனது ஒரே ஒரு பிள்ளையையும் மனைவியையும் இழந்த முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ம.தேவேந்திரன் சரியான காரணம் இன்றி திடீர் பணி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதேபோல ஏழை விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்துவந்ததால் கிளிநொச்சி உதவி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் சீதாலட்சுமி ஆனந்தராஜாவின் பதவியும் பறிக்கப்பட்டதாக விவசாயிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா பணி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதாக வடமாகாண ஆளுநரால் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கும் சொல்லப்பட்ட காரணமும் உரிய காரணம் அல்ல. தர்மபுரம் இல – 01 பாடசாலையின் கட்டடத்தினை அமைப்பதற்கு வடமாகாண ஆளுநரால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. குறித்த பாடசாலையினை கட்டி முடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டே கல்விப் பணிப்பாளருக்கான பணி இடமாற்றல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாடசாலை கட்டுவதற்குரிய நிதியறிக்கை கல்வி அமைச்சிற்கு கிளிநொச்சி கல்வித் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான பதிலோ நிதியோ வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டு கல்விப்பணிப்பாளர் ஒருவரை பணி இடமாற்றுவது பொருத்தமற்ற முடிவாகும்.

தனது அரச பணியின் இறுதி ஆண்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரை தற்போது சரியான காரணம் இன்றி திடீர் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவது ஏற்புடையது அல்ல. ஓர் அதிகாரி சமூகத்தில் நீண்டகாலம் அரிய பணியாற்றி அவர் ஓய்வு பெறும் காலத்தில் அவர் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரை மன உழைச்சலுக்கு உட்படுத்துவது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகளுடன் மிக நீண்டகாலமாக ஒன்றித்து வாழ்ந்த அவரை திடீரென ஒதுக்குவது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்.

அதே பணிக்கு மீண்டும் ஒருவர் வருகின்றபோது அந்தப் பொறுப்பிற்கான அனைத்து விடயங்களையும் அறிந்து நிர்வகிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பது கல்வித்துறை சார்ந்தவர்களின் கவலையாக இருக்கின்றது. வடமாகாண ஆளுநர் இராணுவ உயர் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால், இராணுவ நடைமுறைகளைப் பின்பற்றி சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது. சிவில் நிர்வாகத்திற்கும் இராணுவ நிர்வாகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய தரப்புக்களைக் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை, கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா தனது ஓய்வுகாலம் வரையில் குறித்த கல்வி வலயத்தில் பணியாற்ற வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா நேற்று புதன்கிழமை முதல் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றார் என்று வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உத்தரவிட்டதனை அடுத்து கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து கல்விப்பணிமனைக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கல்விப் பணிப்பாளரையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .