2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சுமந்திரனுக்கு ஆதரவு வழங்குவது யார்?’

Editorial   / 2018 ஜனவரி 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

“தமிழ்ச் சமூகமானது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.  

மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.  

அண்மையில் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, இன்று (10) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“யாழ்ப்பாணத்தில், அண்மையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களைக் கண்டித்தது மாத்திரமல்லாமல், ‘ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என்ற தோரணையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தனது கருத்துகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை என்றும் மாற்றுக் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் ஆகவே, ஊடகங்கள் திருந்த வேண்டும் என்றும் அவர் சீற்றத்துடன் கூறியிருக்கிறார்.  

“புதிய அரசியல்சாசனம் தொடர்பாக, இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதும், அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதும், சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் போன்றோரை சீற்றமடைய வைத்திருக்கிறது. தாங்கள் கூறும் கருத்துகளை மட்டுமே ஊடகங்கள் காவிச் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், ஏனையோரின் கருத்துகள் ஊடகங்களில் வருகையில், பதற்றப்பட்டு, அஞ்சி ஊடகங்களை மிரட்டும் அளவுக்குச் செல்கின்றனர்.  

“இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக, தமிழர் தரப்பில் சம்பந்தன், சுமந்திரனைத் தவிர, இது நியாயமானது என்று எடுத்துச் சொல்வதற்கு தமிழரசுக் கட்சியில் கூட யாருமில்லை. இதனால்தான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து பொதுவெளியில் விவாதிக்கவோ, இல்லையேல் தமது கருத்துகளை முன்வைக்கவோ முடியாமல் மௌனம் சாதிக்கின்றனர்.  

“கடந்த ஆட்சிக் காலத்தில், ஊடகவியலாளர்களையும் அரசாங்கத்தை விமர்சிப்போரையும் வெள்ளை வானில் கடத்திச் சென்று கொலை செய்வது என்பது சர்வசாதாரணமான விடயமாக காணப்பட்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை அரசாங்கம் ஆதரவளித்து அவர்களைப் பாதுகாத்தது. இன்று, சுமந்திரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள மிரட்டலைப் பார்க்கின்றபோது, இவர் யாருடைய ஆதரவின்பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .