2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'உள்ளீர்ப்பு, பதவியுயர்வு பூரணமாக முடிக்கப்படவில்லை'

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை ஆசிரியர் சேவை புதிய பிரமாணக்குறிப்பின்படி ஆசிரியர்களுக்கான உள்ளீர்ப்பு, பதவியுயர்வு என்பன கிழக்கு மாகாணத்திலுள்ள சில வலயக் கல்வி அலுவலகங்களில் பூரணமாக முடிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

சில வலயக்கல்வி அலுவலகங்களில் உள்ளீர்ப்பு இடம்பெற்றிருந்தாலும் பதவியுயர்வு அதனோடிணைந்த சம்பளமாற்றம் என்பன இன்னும் செய்துமுடிக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

சில ஆசிரியர்களுக்கு தற்சமயம் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கின்ற சம்பளத்திலிருந்து இரு சம்பள உயர்ச்சிகள் வெட்டப்பட்டு சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள அரச சேவையாளர்களுக்கான சம்பள மாற்றம்-2016 எனும் சுற்றுநிருபத்தை எவ்வாறு அமுல்படுத்த முடியும் என இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிபர்  ஆசிரியர்களுக்கான புதிய பிரமாணக்குறிப்பின்படி அவர்களை முதலில் உள்ளீர்ப்பு செய்து பின்னர் பதவியுயர்வு சம்பள மாற்றம் செய்தாக வேண்டும். அதன்பின்னரே புதிய சம்பள மாற்றத்தை வைத்து புதிய சம்பளத்தைக் கணிப்பிடமுடியும்.

அதாவது 31.12.2015இலுள்ள சம்பள படிநிலையை வைத்தே புதிய சம்பள மாற்றம் கணிப்பிடப்படும். ஆனால் 31.12.2015 இல் ஒரு அதிபர் அல்லது ஆசிரியர் எந்த சம்பள படிநிலையிலுள்ளார் என்பது இன்னும் பெரும்பாலான வலயங்களில் கணிக்கப்படாத துரதிஸ்ட சூழ்நிலை நிலவுகிறது.

நாட்டிலுள்ள 36 துறை சார்ந்த அரச சேவைகளுக்கென புதிய சம்பள மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது. ஏனைய சேவைகளுக்கான சம்பளமாற்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு சேவைகளிலுள்ள ஊழியர்களுக்கு மட்டும்  இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனவே, இது தொடர்பாக கல்வி அமைச்சு இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாமிடம் கேட்டபோது, பெரும்பாலான வலயங்களில் இப்பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாக அறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அப்படி பூர்த்திசெய்யாத வலயங்களிருப்பின் மிகவிரைவாக பூர்த்தியாக்க அறிவுறுத்தமுடியுமெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .