2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் உயிரிழப்பு: 8 பேருக்கு விளக்கமறியல்; 5 பேருக்கு பிணை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தின் வெளிச்சவீட்டு வீதியில் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 பேரை இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 05 பேர் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்பதால் இவர்கள் ஒவ்வொருவரையும் தாய் அல்லது தந்தை உட்பட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  02 சரீரப் பிணைகளிலும் 5,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் நீதவான் விடுவித்துள்ளார்.

அத்துடன், இம்மாணவர்கள் வெள்ளிக்கிழமை தோறும்; பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான அஹமட் லெப்பை அசாரூத்தீன் (வயது 22), ஏ.ஆ.சனூஸ் (வயது 22) ஆகியோர் பலியாகினர்.  
விபத்தில் பலியான இளைஞர்கள் இருவரும் அக்கரைப்பற்று –கல்முனை பிரதான வீதி ஊடாக ஒலுவில் சந்தியிலிருந்து பயணித்துள்ளனர். இவ்வேளையில் குறித்த வீதி ஊடாக ஒலுவில் பிரதேசத்திலிருந்து  07 மோட்டார் சைக்கிள்களில் 14 பேர் வேகமாக வந்தபோதே இந்த விபத்துச் சம்பவித்தது,

இந்த விபத்துத் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மொத்தமாக 14 பேரைக் கைதுசெய்தனர். இவர்களில் பிரதான சந்தேக நபரை கடந்த 10ஆம் திகதி பொலிஸார் கைதுசெய்த நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே மேற்படி 13 பேரும்  புதன்கிழமை (13) கைதுசெய்யப்பட்டனர்.

விபத்து இடம்பெற்றவுடன் விபத்தில் பலியான இளைஞர்கள் இருவரையும் அவ்விடத்தில் விட்டிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ள குற்றச்சாட்டிலேயே 17, 18, 19 வயதுகளையுடைய இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .