2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

15 வருடங்களின் முன் இடம்பெயர்ந்த திருக்கோவில் பிரதேச மக்கள் இதுவரையில் மீள்குடியேற்றப்படவில்லை: யோகே

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள கஞ்சிகுடிச்சாறு, சாகாமம், காஞ்சிரங்குடா, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக வெளியேறிய 1,042 குடும்பங்களும் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதிலும் இதுவரையில்  மீள்குடியேற்றம் செய்யப்படாமை குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு  அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் தனது அதிருப்தியையும் கவலையும் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
'திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், சாகமம், காஞ்சிரங்குடா கிராமங்களை சேர்ந்த 1,042 குடும்பங்கள் கடந்தகால யுத்தம் காரணமாக தமது  இருப்பிடங்களை விட்டு வெளியேறி திருக்கோவில் விநாயகர்புர இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் கடந்த 15 வருடங்களுக்கும்  மேலாக வாழ்ந்து வருகிறார்கள்.
 
இங்கு இவர்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் குடியேற விரும்பியபோதிலும் அவர்கள்  இதுவரையில் சட்ட ரீதியாக குடியேற்றப்படவில்லையென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தாங்களாக தமது இருப்பிடங்களுக்கு சென்று சில பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முனைந்துள்ளனர். பயிர்ச்செய்கையின் பின் அங்கிருந்து வெளியேற வேண்டிவரும் சூழ்நிலை உள்ளதெனவும் அவர்கள் கவலைப்படுகின்றனர்.

இக்கிராம மக்கள் அனைவரையும் அவர்களது சொந்த கிராமங்களில் சட்டரீதியாக குடியமர்த்தி அவர்களுக்குரிய அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்து உதவுவதுடன் அவர்களது அவசியத் தேவையான குடிநீர், வீடு அல்லது தற்காலிக கூடாரம், மின்சாரம், போக்குவரத்து, சுயதொழில், கல்வி, மீள்குடியேற்ற கொடுப்பனவு உட்பட்ட அவசியத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற உதவ வேண்டும்.

தற்போது கிழக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் குடியேறியுள்ள நிலையில் நீண்டகாலமாக இம்மக்கள் குடியேற்றப்படாமலிருப்பது பொருத்தமானதாக அமையாதென்பதை தாங்கள் நன்கறிவீர்கள். எனவே, இவர்களை மீள்குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்வருவீர்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .