2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அம்பாறை கரையோர மாவட்டத்தை மு.கா. பெற்றுத் தரும்:பஷீர் சேகுதாவூத்

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                alt                   (யூ.எல்.மப்றூக்)

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் முடிவதற்குள் அம்பாறை மாவட்டத்திற்கான கரையோர மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 10 ஆவது நினைவு தின நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை சாஹிறா கல்லூரியில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் இங்கு உரையாற்றிய  பஷீர் சேகுதாவூத்...

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தான் இலங்கையின் முதல் முஸ்லிம் அகதி. கொழும்பு நோக்கி அவர் மேற்கொண்ட அந்த அகதிப் பயணம்தான் முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு தேசிய அரசியல் இயக்கத்தைத் தந்தது. நில பிரப்புக்களோ, ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் படித்தவர்களோ இந்த அரசியல் இயக்கத்தை நமக்குத் தரவில்லை.

அந்த முதல் அகதியின் பயணம்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தின் வித்தாக அமைந்தது. 

இந்த உலகத்தின் எந்த மூலையிலாவது ஓர் அகதி உருவாக்கிய அரசியல் கட்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இலங்கையிலே இந்த முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு முகவரி தேடித்தருவதற்கு ஒரு முஸ்லிம் அகதி காரணமாக இருந்தாரென்றால், அது நமது தலைவர் அஷ்ரப் அவர்கள் தான்.

இந்தக் கட்சி மேட்டுக் குடிகளின் கட்சியில்லை.  எந்தவித வசதிகளுமற்று வார்த்தைகளோடு விளையாடிய முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தினையும், அமைச்சுப் பதவிகளையும் அலங்கரித்தார்கள்.

ஓர் இயக்கத்தின் வளர்ச்சியை, ஒரு கட்சியின் பலத்தை எந்தவொரு கோட்பாடும் தீர்மானிப்பதில்லை. தலைவர்களினதும், தொண்டர்களினதும் தியாகங்களே தீர்மானிக்கின்றன.

முஹம்மது நபியவர்கள் அன்று இஸ்லாத்தைப் பரப்பியபோது, அவர்களிடம் பணமிருக்கவில்லை, கொள்கை கோட்டுபாடுகளை ஏற்றுக்கொள்ள ஆட்களிருக்கவில்லை. ஆனால், முஹம்மது நபியவர்களின் தியாகமே இஸ்லாத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.

இந்தியாவிலே மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களின் தோள்களிலே கைகளைப் போட்டுக் கொண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த வரலாற்றினைப் பார்க்கின்றோம். அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமல்ல. மெலிந்த, கச்சைத் துணியைக் கட்டிய, பொக்கை வாயுள்ள, சோடாப்புட்டிக் கண்ணாடி அணிந்த, எந்தவிதக் கவர்ச்சியுமற்ற ஒருவரால், இந்தியாவில் அப்போதிருந்த 30 கோடி மக்களுக்கும் சுதந்திரத்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியுமென்றால், அதற்குக் காரணம் அந்த மனிதரின் தியாகமேயன்றி வேறெதுவுமில்லை.

அதுபோலத்தான் எங்கள் தலைவர் அஷ்ரபும் இந்தக் கட்சியை எமக்குத் தந்தார். அவர் வாழ்ந்த காலங்களில் இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்கி, கருத்தியல்களைத் தந்தார். அவர் மரணித்த பிறகோ, அவருடை கருத்தியல்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு தற்போதைய தலைவரின் கீழ் இந்த அரசியலைச் நாம் செய்கின்றோம்.

இலங்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற அனைவருக்கும் ஒருவர் தலைமைத்துவத்தினை வழங்கிய வரலாறு இருந்ததில்லை. ஆனால், இலங்கையின் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் தலைமை தாங்கிய ஒருவர் இருந்தாரென்றால், அவர் எமது தலைவர் அஷ்ரஃப் தான்.

அதுமட்டுமல்ல, நுஆ என்தொரு கட்சியை உருவாக்கியதன் மூலமாக கடை நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கும் தலைமைத்துவத்தைக் கொடுக்கின்ற ஒருவராகவும் வளர்ச்சியடைந்தார்.

அதேவேளை, இன்று முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம், வடக்கு கிழக்குக்கு வெளியில் பிறந்த ஒருவரை இந்த முழு நாட்டு முஸ்லிம் சமுதாயத்துக்குமுரிய தலைவராக உருவாக்கியிருக்கிறது என்றால்,அதற்குக் காரணம் அஷ்ரப் இட்ட அடித்தளமேயன்றி வேறெதுவும் கிடையாது.

வெளி மாகாணத்தில் இருந்து வருகின்ற ஒருவர், முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியைத் தவிர்த்து கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? ரவுப் ஹக்கீம் எனும் இந்த தலைமைத்துவத்தின் பெயரிலே எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் இன்று வென்று கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு குக்கிராமத்திலிருந்து அழிந்தாலும் தலைமைத்துவம் இருக்க முடியாது. தலைமைத்துவத்தை எந்தக் குக்கிராமத்திலிருந்தும் நாம் தேட முடியும் என்பதற்கு தற்போதைய தலைவர் ரவுப் ஹக்கீம் நல்லதொரு உதாரணம்.

எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எதிர்க்கட்சி,ஆளுங்கட்சி அரசியல்களை எவ்வாறு செய்தார் என்றும், எவ்வாறு இணக்க அரசியல் செய்தார், எவ்வாறு பிணக்கு அரசியல் செய்தார் என்பதையும் இன்றைய சூழ்நிலையில் மீட்டிப் பார்க்க வேண்டியது நமது கடமையாகிறது.

தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் காலத்திலும் அதன் பின்பும் முஸ்லிம் காங்கிரஸின் பிணக்கு, இணக்க அரசியல், ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி அரசியல் எனும் கோணத்தில் நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தனது இணக்க அரசியலை பிரேமதாஸவிலிருந்து ஆரம்பித்தார். பிரேமதாஸவின் கொள்கைகளில் நூறு வீதம் பிடிப்பில்லாத போதிலும், அன்று அவர் செய்த இணக்க அரசியல் தான் நமது கட்சி இன்றும் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கக் காரணமாக இருக்கிறது.

அந்த இணக்க அரசியலை ஒத்துக் கொள்ளாத அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன் நேரடியாக எதிர்ப்பு அரசியலைச் செய்ய முற்பட்டபோது அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதென்பது வரலாறு.

இணக்க அரசியலைச் செய்வதற்காக, உள்ளே பிணக்கு அரசியலுக்குத் தயாராக இருந்தவர்களைத் மு.கா. தூக்கியெறிந்தது. எமது தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எமக்கு அதை அனுபவத்தின் வாயிலாகக் காட்டினார்.

பல்வேறு விதமான இணக்க அரசியலைச் செய்த அஷ்ரஃப் அவர்கள், விடுதலைப் புலிகளோடு கடைசிவரை பிணக்கு அரசியலையே செய்தார். அன்றைய சூழல் அப்படி இருந்தது. பின்னர் அவர் இருந்திருந்தால், புலிகளோடு ஒரு இணக்க அரசியலுக்குப் போயிருக்கக் கூடிய நிலையொன்றும் உருவாகியிருக்கலாம்.

சம்பந்தனோடு, ஜோசப் பரராஜசிங்கத்தோடு, சாதாரண தமிழ் மக்களோடு என அஷ்ரப் இணக்க அரசியலைச் செய்து வந்தார்.

அதன் பின்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவோடு அஷ்ரப் இணக்க அரசியலையும், பிணக்கு அரசியலையும் செய்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியோடு அஷ்ரப் செய்த இணக்க அரசியலின் ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கென்று தனியொரு ராஜியத்தைக் கொள்கையளவில் ஆதரிப்பதற்கானதொரு நிலையை அந்தக் கட்சிக்கு ஏற்படுத்தியது.

ஆக, மறைந்த தலைவரின் காலத்தில் ஒரேயடியாக இணக்க அரசியலையோ, பிணக்கு அரசியலையோ முஸ்லிம் காங்கிரஸ் செய்து வரவில்லை. 

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கும், அந்தக் கட்சியை இங்கு அழிக்க முடியாமல் போனமைக்கும் பிரதானமான காரணங்களில் ஒன்றாக இருப்பதது, பிரேமதாஸவோடு அஷ்ரஃப் செய்த இணக்க அரசியலாகும்.

அன்று அமைச்சர்களாக இருந்த மன்சூர்,சம்மாந்துறை மஜீத் மற்றும் அம்பாறையில் தயாரட்ண ஆகியோரோடு மு.கா. பிணக்கு அரசியல் செய்தது. ஆனால், அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸாவோடு இணக்கமாக இருந்தது. மேற்படி மூவரையும் அரசியலில் ஓரங்கட்டுவதற்கு அஷ்ரப் அவர்கள் அன்று பயன்படுத்தியது, பிரேமதாஸாவுடனான இணக்க அரசிலைத் தான் என்பதே உண்மையாகும்.

பிரேமதாஸவோடு இணக்க அரசியல் செய்தமையால், தேர்தலில் வெட்டுப் புள்ளி மட்டும் குறையவில்லை. வேறு உபாயங்களும் இருந்தன. அன்று அம்பாறை மாவட்டத்தில் இருந்த முஸ்லிம்கள் எவரும் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் குதிக்க முடியாத நிலையை அஷ்ரப் ஏற்படுத்தினார். இது அவர் செய்த இணக்க அரசியலின் விளைவுதான்.

கட்சியையும், சமூகத்தையும் காற்பாற்றுவதற்காகத் தான் இணக்க அரசியலும், பிணக்கு அரசியலும் என மறைந்த தலைவர் காட்டித் தந்துள்ளார்.

வரலாற்றில் ஆகப் பாரியதொரு இணக்க அரசியலையும் மு.காங்கிரஸ் செய்திருக்கிறது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனோடு செய்து கொண்ட இணக்க அரசியலாகும்.

மு.கா தற்போது அரசியலில் எடுத்துள்ள முடிவு என்பது மிகத் தெளிவான முடிவாகும். எனவே, இந்தத் தீர்மானத்தை மு.கா.வின் ஆதரவாளர்கள்நூறு வீதம் ஆதரிக்க வேண்டும்.

மு.கா. இரண்டு குழுக்கள் இல்லை. ஆனால், பல கருத்துக்கள் இருக்கின்றன. பல கருத்துக்கள் இருப்பது என்பது தான் ஜனநாயகம். ஆனால், பிரிந்து விடாமல் இருக்க வேண்டும்.

குழுக்களாக நின்று கொண்டு பேசக் கூடாது. தொலைபேசியில் ஆட்கள் சேர்க்கக் கூடாது. அதியுயர்பீட உறுப்பினர்களைக் கூப்பிட்டுப் பேசக் கூடாது. தலைமைத்துவத்தோடு தான் பேச வேண்டும். அது தான் கட்சி.

இலங்கையிலிருக்கும் இந்த ஜனநாயமானது இந்தியாவிலிருப்பதை விடவும் தரங்குறைந்தது. மேற்குலக ஜனநாயகத்தை விடவும் மிக மிகத் தரங்குறைந்தது.

குடும்பச் சண்டை அல்லது கட்சிச் சண்டை என்பது அர்த்தமாகும். சொன்னால் குடுமி ஜனநாயகம் என்றும் இதைக் கூறலாம். அது தான் இங்குள்ள ஜனநாயக முறையாகும்.

எனவே, இந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் எமது கட்சி தீர்மானங்களை எடுக்க முடியும். மேற்குலக ஜனநாயகத்தின் அடிப்படையில் நாம் இங்கு தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆகக்குறைந்தது, இந்தியாவில் இருக்கின்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் கூட, இங்கு தீர்மானங்களை எடுக்க முடியாது.

கட்சிச் சண்டையுள்ள, கட்சிக்குள் சண்டையுள்ள, கட்சிகளிடையே சண்டையுள்ள அரசியலின் வழியில் பயணித்துத்தான் நாம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே, அன்பின் சகோதரர்களே நமது கட்சியினுடைய தலைமைத்துவத்தின் கருத்துக்களைப் பலப்படுத்துங்கள்.

இன்றுள்ள இந்த அரசின் தன்மையும், நிலைமைகளையும் பார்க்க வேண்டும். நாங்கள் இன்று எந்தவிதமான பேரங்களையும் இந்த அரசிடம் முன்வைக்கவில்லை. ஆனால், அவர்கள் பலமிழக்கின்ற போது எங்களுடைய பேரங்களை முன்வைப்போம். அவர்கள் பலமாக இருக்கும்போது, பேரங்களை முன்வைப்பதென்பது முட்டாள்தனமாகும்.

மு.கா தற்போது எடுத்துள்ள முடிவின் நன்மை தீமைகளைக் காலம் தீர்மானிக்கும் என்று எமது தலைவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--