2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

காணிகளிலிருந்து வெளியேறும் உத்தரவை ஏற்றுக்கொள்ள அஷ்ரப் நகர் மக்கள் மறுப்பு

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தமது குடியிருப்புக் காணிகளின் அனுமதியை ரத்துச் செய்வதாகவும், அங்கிருந்து தம்மை வெளியேற்றுமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர விடுத்துள்ள உத்தரவை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இந்த உத்தரவினை தாம் இனவாதம் கொண்டதாகவே பார்ப்பதாகவும் அஷ்ரப் நகர் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பரம்பரை பரம்பரையாக தாம் குடியிருக்கும் நிலத்திலிருந்து தம்மை யாரும் வெளியேற்ற முடியாது என்றும், அவ்வாறு தம்மை யாராவது வெளியேற்றுவதற்கு முற்பட்டால் தாம் அந்த இடத்திலேயே மரணிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறித்த பொதுமக்கள் மேலும் கூறினர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் பரப்பரவுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்தே அஷ்ரப் நகர் மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் அ. கமர்தீன் என்பவர் கூறுகையில்,

"அஷ்ரப் நகரிலுள்ள என்னையும், ஏனைய 30 பேரையும் எங்கள் காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர உத்தரவிட்டுள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது காணி அரசாங்கத்துக்கு உரியது என்றும், அதில் நான் சட்ட விரோதமாகக் குடியிருப்பதாகவும் கூறி, கடந்த 2007 ஆம் ஆண்டும் வனபரிபாலனத் திணைக்களத்தினர் எனக்கெதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், அந்த வழக்கில் எனக்குச் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, இவ்வருடம் 04 ஆம் மாதம் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் - என்னுடைய காணிக்கு அரசாங்கம் சட்டபூர்வமான உத்தரவுப் பத்திரம் வழங்கியுள்ளதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே எமது காணியிலிருந்து எம்மை வெளியேற்றும் உத்தரவை அரசாங்க அதிபர் பிறப்பித்துள்ளார்" என்றார்.

மேற்படி, அஷ்ரப் நகர் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய காணிகளின் குடியிருப்பாளர்கள் அவர்களின் நிலங்களுக்குரிய அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ள போதும், கடந்த காலங்களில், அவ் அனுமதிப் பத்திரத்திரங்களை உரியவர்கள் வருடா வருடம் புதுப்பிக்கவில்லை எனக் கூறியே மாவட்ட அரசாங்க அதிபர  குடியிருப்பாளர்களை வெளியேற்றும் உத்தரவினை வழங்கியுள்ளார்.

"இக்காணிகளில் வாழ்வோர் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்கள். இங்கிருந்து இவர்கள் வெளியேற்றப்படுவார்களாயின், அவர்கள் வாழ்விடம் இல்லாமல் அலைய நேரிடும்" என்று இப்பகுதியைச் சேர்ந்த சமூக சேவையாளரொருவர் கூறுகின்றார்.

இதேவேளை, அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள 31 பொதுமக்களின் காணிகளைப் போன்று, 1980 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்படாத 185 பேருக்குச் சொந்தமான காணிகள் தீகவாபி பிரதேசத்தில் உள்ளதாகவும், அவ்வாறாயின் அஷ்ரப் நகர் முஸ்லிம் மக்களின் காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்க அதிபர் ஏன் தீகவாபியிலுள்ளவர்களின் காணிகள் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அஷ்ரப் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் வினவுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .