2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர்- முதலமைச்சர் சந்திப்பு விரைவில்

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாணத்திலுள்ள விழிப்புலனற்றோரின் நலன் மற்றும் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், மிக விரைவாக  கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் விழிப்புலனற்றோர் அமைப்புகளுக்குமிடையிலான சந்திப்பொன்றை தான் ஏற்படுத்தித் தருவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த விழிப்புலனற்றோர் நலன் தொடர்பில் நல்ல திட்டங்களை ஆரம்பிப்பேன் என்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உறுதியளித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த விழிப்புலனற்றோர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியொன்று இன்று காலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

விழிப்புலனற்றோர் விடயத்தில் பொறுப்பு மிக்க பலர் பராமுகமாக இருப்பதாகவும், உரியவர்களிடம் தமது தேவைகள் தொடர்பில் பேசுவதற்கு தமக்குச் சந்தர்ப்பமொன்றைப் பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம், அங்கிருந்த விழிப்புலனற்றோர் சார்பாக கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் உதுமாலெப்பை தொடர்ந்து பேசுகையில்ளூ

"கிழக்கு மாகாண சபையின் நிதியினை அந்த மாகாண மட்டத்திலேயே பயன்படுத்த முடியும். அதனால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விழிப்புலன் அற்றோருக்கு கிழக்கு மாகாணசபையினூடாக உதவிகளை வழங்கலாம். ஆனால், வட மாகாணத்தவர்களுக்கு கிழக்கு மாகாணசபையின் நிதியினை நேரடியாகப் பயன்படுத்த முடியாது" என்றார்.

ஆயினும், வட மாகாண ஆளுநருடன் பேசி கிழக்கு மற்றும் வடக்கு மாகாண விழிப்புலனற்றோருக்கிடையிலான நல்லுறவு அமைப்பொன்றை உருவாக்கி அதனூடாக இரண்டு மாகாணத்தவர்களுக்கும் உதவிகளைச் செய்வதற்கு என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார்.

இந்நிகழ்வில், இரண்டு மாகாணத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, தனது சொந்த நிதியிலிருந்து சீருடைகளை அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.

இதன்போது, கல்முனை மாநகர முதல்வர் எஸ்.இஸற்.எம். மசூர் மௌலானா, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் எம்.எஸ். அப்துல் ஹபீழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--