2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம்: மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கல்முனை கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும் சுதந்திரமடைந்த பின்னரும் காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களாலும், பேரினவாதிகளாலும் சிறுபான்மை இனங்கள் பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இவர்களால் மிக அண்மைக்காலமாக நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக திட்டமிட்ட முஸ்லிம்களின் காணி அபகரிப்பு, கிறிஸ்பூதங்களைக் கொண்டு எமது பெண்களையும் பிரதேசங்களையும் சீரழித்தமை, திக்குவெல்ல முஸ்லீம்கள் தாக்கப்பட்டமை, அனுராத புரம் பள்ளிவாசல் உடைப்பு, சிலாபம் காளி கோவிலில் அத்துமீறியமை என பல சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

பேரினவாதக் கட்சிகளிலிருந்து கொண்டு இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க முடியாது, நியாயம் கேட்க முடியாது என்ற இன்னோரன்ன பல வரலாற்றுக் காரணங்களை முன்வைத்து இனிமேலும் வரலாற்றுத்தவறை விடக்கூடாது என்பதற்காகவே முஸ்லீம் மக்களுக்கான தனிக்கட்சி அரசியலை எமது மண்ணில் பிறந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரபே தொடக்கி வைத்தவர்.

எம்மைவிட அதிகளவு அறிவுசார் நபர்களை வைத்துக்கொண்டுள்ள, அரசுக்கெதிராக ஆயுதமேந்தி போராட்டம் நடாத்தி பல ஆயிரக்கணக்கான இன்னுயிர்களைப் பலிகொடுத்த சகோதர தமிழ் சமூகம் இத்தனை இழப்புகளின் பின்னும் தனிக்கட்சி அரசியலை மட்டும் இன்னும் தொடர்வதனையும், தமிழ்கட்சியை ஆதரிப்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இன்றுள்ள நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிறிய சைகையை காட்டினாலேயே போதும் அள்ளிக் கொடுக்க அரசு காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதே தழிச் சமூகத்திலிருந்து கொண்டு  தமிழ் மக்களின் விருப்பின்றி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்த் தலைவர்கள் சிலர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றனரேயொழிய தமிழ் மக்களுக்கான தீர்வு பூச்சியமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. அரசு தற்போது தமிழ் மக்கள் விரும்பும் கட்சியுடனே தீர்வுத் திட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது.

அரசுடன் இணைந்து செயற்பட்ட ஆனந்தசங்கரி, சித்தாத்தன் போன்ற தமிழ் தலைவர்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சென்றுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைய அரசியல் களத்தை நோக்கு கையில் நிச்சயமாக சர்வதேச அழுத்தம் காரணமாக ஏதோ ஒரு தீர்வுத் திட்டம் வரக்கூடிய வாய்ப்புக்களே தென்படுகின்றது.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தியால் மட்டுமே எமக்கான தீர்வினைப் பெற்றிட முடியும். இது நடக்கக்கூடாது என்பதற்காகவே முஸ்லீம் காங்கிரசுக்கு எதிரான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனவே, நாம் சோரம் போய்விக்கூடாது. எமது கட்சியின் பலத்தைப் பாதுகாக்க வேண்டியது எம்மெல்லோரினதும் கடமையாகும். குறிப்பாக இது கல்முனைத்தொகுதி முஸ்லிம் மக்களின் தார்மிகக் கடமையாகும். ஏனெனில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, காத்தான்குடி, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் பிரிவினையைத் தோற்றுவித்துள்ள இவர்களின் அடுத்த திட்டம் கல்முனையை குளப்புவதே.

தனித்தனியாக விலைபேசி எம்மைப்பிடிப்பதே பேரினவாதிகளின் நோக்கம். இச்செயற்பாடு இன்று நேற்று ஆரம்பமானதல்ல. 1980ம் ஆண்டு தலைவர் அஷ்ரப் முஸ்லீம் காங்கிரசை ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்தச் சதி நடைபெற்று வருகின்றது.

2000ம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி எமது தலைவரின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் வெற்றிடத்திற்கு எமது கல்முனை தொகுதிமட்டுமல்ல, அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல முழு நாட்டு முஸ்லிம்களும் சகோதரர் நிஸாம் காரியப்பரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுதல் சந்திரிக்கா அம்மையாரால் நிராகரிக்கப்பட்டதிலிருந்து எமது கல்முனைத் தொகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அன்று சந்திரிக்கா தொடங்கிய ஆட்பறிப்பு வேலை இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்ற உண்மையை உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மறந்துவிடமாட்டார்கள்.

இந்த நிலைமையிலேயே தற்போது நடைபெறப்போகும் மாநகரசபைத் தேர்தலிலும் எம்மவர்கள் விலைபோகப் பார்த்தனர். கல்முனையை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என எமது எம்.பி. தெரிவிக்கின்றார். அமைச்சர் அதாவுல்லாவின் அபிவிருத்தி பணிகளை மேடை போட்டு  பேசுகின்ற அளவுக்கு எமது எம்.பி மாறியிருப்பது வேதனை தருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே! தனி மனிதர் அதாவுல்லாவின் குதிரை சின்னத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையையும், பிரதேச சபையையும் கைப்பற்றப்பட்டதை நினைத்து பாருங்கள். வெற்றிலையில் தேர்தல் கேட்கவில்லை என்பதற்காக அங்கு அபிவிருத்தி முடக்கப்படவில்லை. அதாவுல்லா தனது குறு நிலப் பலத்தை நிரூபித்ததைப் போன்று நாம் எமது கல்முனை பெரும் நிலப்பலத்தை அரசுக்கு நிரூபிக்க வேண்டும். இவ்வாறு பல சரித்திர சம்பவங்களைக் கூறிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி விடயத்திற்கு வருகின்றேன்.

மேற்படி விடயங்களிலிருந்து நாம் எமது கட்சியை புனர்நிர்மானம் செய்தே ஆக வேண்டும். அது தலைவர் பிறந்த கல்முனைத் தொகுதியிலிருந்து தொடங்கப்படல் வேண்டும். தலைவர் இருந்த காலத்தில் கல்முனை என்றோ, சாய்ந்தமருது என்றோ, மருதமுனை என்றோ, நற்பிட்டிமுனை என்றோ பிரதேச பாகுபாடு இருந்ததில்லை.

அதன் பின்னர் கல்முனையை ஆண்ட தலைமைகளின் பிழையான வழி நடத்தல்கள் காரணமாக இன்று சாய்ந்தமருது மக்களும் மருதமுனை மக்களும் தனி பிரதேச சபையை கேட்கின்றனர். சாய்ந்தமருதுவில் இக்கோரிக்கை விஸ்வரூபமெடுத்துள்ளது.

சாய்ந்தமருது மக்களின் இந்தகோரிக்கை நியாயமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எமது கல்முனைத் தொகுதியில் கட்சி அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு புதிய சித்தாந்தம் உருவாக்கப்படல் வேண்டும். கல்முனைத் தொகுதியில் கட்சியை வழி நடத்த நேர்மையான தலைமைத்துவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அதற்குப் பிறகும் பிரதேச வேறுபாடு களையப்படாவிட்டால் இன்ஷா அல்லாஹ் சாய்ந்தமருதில் பிரதேச சபையல்ல நகரசபை அந்தஸ்து தரப்பட வேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்க போவது நான்தான் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மாநகர சபைத்தேர்தல் நல்ல சந்தர்ப்பம்

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று தலைவரின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட வேட்பாளர் வெற்றிடத்திற்கு நிஸாம் காரியப்பரை நாம் எல்லோரும் ஏகமனதாக விரும்பியது ஏன்? தலைவரின் பாசறையில் வளர்ந்தவர், தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர், சாய்ந்தமருது தகப்பனின் மகன் கல்முனைத்தாயின் மகன், மருதமுனை, நற்பிட்டிமுனையின் சொந்தக்காரர், கறைபடியாத கரங்களை உடையவர் கட்சிக்காக 20 வழக்குகளுக்கு மேல் பேசி வெற்றி கொண்டவர், பிரதேச பாகுபாடு என்னவென்றே தெரியாதவர்.

மொத்தத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பசுமையான மனிதர். இத்தனை தகுதிகளையுமுடைய இந்தப் பொதுமகனை நாம் எதிர்வரும் மாநகர சபை தேர்தலில் மேயராக்கி கல்முனையின் பொறுப்பை ஒப்படைத்து தலைவர் அஷ்ரபை எவ்வாறு ஏற்றுக்கொண்டோமே அவ்வாறு நிஸாம் காரியப்பருக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்போம்.

பிரதேச பாகுபாடின்றி சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை மக்கள் அனைவரும் நிஸாம் காரியப்பருக்கு ஒரு வாக்கினை வழங்கி அவரை பொதுவானவராக பொறுப்புச் சாட்டுவோம். மீதமுள்ள எமது இரு விருப்பு வாக்குகளையும் எமது பிரதேசங்களில் போட்டியிடும் எமக்கு விருப்பமான ஏனைய வேட்பாளர்களுக்கு  வழங்கி அவர்களையும் நிஸாம் காரியப்பருடன் கைகோர்க்க வைத்து கட்சியை புனர்நிர்மாணம் செய்வோம்! ஒற்றுமைப்படுவோம்! இதனை நான் எனது உதட்டினால் மட்டும் சொல்லவில்லை உள்ளத்தால் சொல்லுகின்றேன்.

சாய்ந்தமருது சம்பந்தமான எனது நிலைப்பாடு

மாநகர சபை தேர்தலில் போட்டியிட பலர் முன்வந்தனர். நானும் மேயராக வர ஆசைப்பட்டேன். எனது விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்தேன். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் நான் மாகாண சபை உறுப்பினராக இருப்பதனால் எனது வெற்றிடம் சிங்களவர் ஒருவருக்கு சென்றுவிடும் என்பதாலும், கல்முனை  தொகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மையை நீக்கி சகலரையும் ஒற்றுமைப்படுத்த இத்தேர்தலை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகவும் எனது நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொண்டேன்.

புதிதாக கட்சிக்கு வருபவர்களையும் உள்வாங்கவேண்டும் எனக் கருதி பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சகோதரர் சிராஸை நானே முன்னின்று வேட்பாளராக நிறுத்தினேன்.

அப்போது கட்சியினால்; சிராசுக்கு தெளிவாகக் கூறப்பட்ட விடயம் இம்முறை மேயர், பிரதி மேயர் பதவிகள் மூத்த போராளிகளுக்கே கிடைக்கும் என்பதேயாகும். (இதற்கு சிராசின் மைத்துனர் டாக்டர் றபீக் சாட்சி பகர்வார். கட்சித் தவிசாளர் பஷீர் சேகு தாவூத், செயலாளர் நாயகம் ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமும் இதனை அறிவர்) இவ்வாறு விடயங்கள் இருக்க தற்போது நடப்பதென்ன? கட்சிக்கு இயற்கையாகவே எதிரானவர்கள் சிராசை பயன்படுத்தி ஊருக்கு மேயர் வேண்டுமென கோஷம் எழுப்புகின்றனர்.

பல உயிர் இழப்புக்களையும், பிரச்சினைகளையும் சந்தித்து, 11ம் இலக்கத்தில் போட்டியிடும்  கட்சியின் மூத்த துணைத் தலைவர் மஜீட் இருக்க, முன்னாள் பிரதி மேயர் பசீர், உயர் பீட உறுப்பினர் பிர்தௌஸ் போன்றோர் இருக்க சிராசுக்கு மேயர் பதவி என்பது இம்முறை பொருத்தமற்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன், கட்சி போராளி என்ற வகையில் எனது மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் நடந்துகொள்ள முடியாது. நண்பர் சிராஸ் தனக்கு கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை பொறுமையுடன் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவாரேயானால் மேயர் அல்ல. அதைவிட உச்சத்திற்கு நிச்சயம் செல்லமுடியும். இதுதான் நான் சிராஸிக்கு சொல்லும் புத்திமதி.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு தலையிடி கொடுக்க வேண்டும். கட்சியை மேலும் கூறு போடமேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பேரினவாதிகளுக்கும், சிற்றினவாதிகளுக்கும்  எமது நடவடிக்கைகள் தீனியாகக் கூடாது.

எனவே, எனதன்பார்ந்த உடன்பிறப்புக்களே... ஊரைக்காட்டிக் கொடுக்கவுமில்லை, யாருக்கும் சதி செய்யவுமில்லை. கட்சிக்காரர்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க, குழப்பவாதிகள் குழப்பிக் கொண்டிருக் கின்றனர்.

நான் மீண்டும் உறுதியாகவும், இறுதியாகவும் கூற வருவது கட்சியை புனரமைப்போம். இதற்காக கல்முனை மாநகரின் தலைமையை நிஸாம் காரியப்பருக்கு வழங்குவோம்.


  Comments - 0

 • sanju Thursday, 06 October 2011 01:18 AM

  கவனமாக வைத்துக்கொள்ளவும் ஈரான் போடோவை. ........... ஹ ஹ ஹ 1௦௦ ஆண்டுகளுக்கு .................... பெருமையா இருக்குது ....... ஹ ஹ.

  Reply : 0       0

  Doc - KSA Thursday, 06 October 2011 02:55 AM

  Time to time, we use to face such issues. Kalmunai or Sainthamaruthu? Who will win? I think, SLMC and his leadership have the right answer and they won't disclose before the election results. In politics, there are many hidden secrets. Mr.Jameel's statement about the Mr.Athaulla, is absolutely correct. Why cant Kalmunai and Sainthamaruthu societies (together) convey a solid message to the rulling by using this election? This is a right time. But SLMC leadership should stand on neutral.

  Reply : 0       0

  frf, sri lanka Thursday, 06 October 2011 02:56 AM

  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளகூடிய நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள்... உங்கள் அரசியல் பயணத்துக்கு...

  Reply : 0       0

  jesmin Thursday, 06 October 2011 03:46 AM

  ஏதாவது சமூகத்திக்கு செய்ய துடிக்கும் ஜமீலுக்கு பாராட்டுக்கள், உன்னால் பலன் பெற்றோர் பலர், தென்கிழக்கு பல்கலை உன் முயற்சியால் கிடைத்ததை சிலர்தான் அறிவர். மாமனிதர் அஷ்ரப் உன் போன்ற இளைஞர்களால் உத்வேகம் கொண்டார் வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Deen Tuesday, 11 October 2011 09:13 PM

  சமூகத்தை பற்றி சிந்திக்கிற உங்களை போன்ற நல்ல மனிதர்களை வாழ விடமாட்டார்கள்.

  Reply : 0       0

  suf suf Thursday, 06 October 2011 04:02 AM

  கட்சி புனரமைப்பு என்பது நிச்சயம் செய்ய வேண்டியதே.

  Reply : 0       0

  siraj Thursday, 06 October 2011 05:26 AM

  ஆஹா ஆஹா நல்லா இருக்கே. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றி பெறட்டும். தலைவர் ரவூப் ஹக்கீம் நல்ல முடிவு எடுக்கட்டும். குப்பைகளின் கதைகளை குப்பையில் போட்டு விட்டு.

  Reply : 0       0

  Amjath Thursday, 06 October 2011 01:02 AM

  இவ்வாறான ஒரு இளம், நியாயமான அரசியல்வாதியின் கருத்தை இந்தகாலத்தில் காண்பது அரிது... உங்கள் முயற்சியும் என்னமுமும் சீர்பெற அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--