2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'முஸ்லிம்கள் தமக்கென ஒரு பகுதியை கோரவில்லை'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'சுதந்திரத்தின் பின்னரும் இந்தியாவின் காஷ்மீர் பிரதேசமும் பாகிஸ்தானும் பிரிவினையையே தூண்டி வருகின்றது. ஆனால் இந்த நாட்டில் எந்தவொரு முஸ்லிமும் தமது சமூகத்துக்கு என ஒரு பகுதியை கோரவில்லை.  இதற்கெல்லாம் காரணம் எமது முன்னோர்களின் சிறந்த வழிகாட்டலும் சிறந்த அனுபவமும்தான்' என  அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் பி.எம்.ஆர்.பண்டார தெரிவித்தார்.

'இந்த நாட்டில் நான்கு மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்களில் சிலர் இன ரீதியான, மத ரீதியான பிளவுகளை எற்படுத்துவதற்கு முயன்று வருவதனை நாம் அவதானிக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை, பள்ளிவாயல் தலைவர்களுடனான சந்திப்பொன்றை அம்பாறை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரியினால் ஞாயிற்றுக்கிழமை(26) நிந்தவூர் ஜீம்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இந்த நாட்டில் மூவினங்களும் சமாதானமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் தனிப்பிட்டவர்களினதும் சில குழுக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவே பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு ஒற்றுமையுடனும் சமாதானத்துடனுமே காணப்படுகின்றது.

இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக சிங்களவர், தமிழர், முஸ்லிம் சமூகத்தினர்களின் தலைவர்கள் பாடுபட்டுழைத்துள்ளனர். அவர்களிடம் ஜாதி, மத, இன, பேதம் காணப்படவில்லை. அவர்கள் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வந்தும் உள்ளனர்.

இந்த நாட்டில் மத ரீதியான பயங்கரவாதம் தோன்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. அதனை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும். இல்லையெனில் நாட்டின்; அழிவுக்கே அது இட்டுச் செல்லும்.

இவ்வாறான பிளவுகளை மேலும் விஸ்தரிக்காமல் அவைகளுக்கு முற்றுப்பள்ளி வைத்து நாட்டின் அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சமூகத்தலைவர்கள் ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பைக் கொண்டவர்களாகும், மக்களை வழிநடத்தி நட்பிரஜைகளாக மாற்றியமைப்பததுடன் நாட்டின் சுபீட்சம், வளர்ச்சி, சாந்தி, சமாதானம் போன்றனவற்றிற்கும் பங்களிப்புச் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இன்று சமூகத்தை சீரழித்து வரும் போதைப் பொருள் பாவனை எமது நாட்டுக்கு மற்றுமொரு சவாலாகக் காணப்படுகின்றது. இதனை ஒழித்துக்கட்ட மதப்பெரியார்கள், சமூகத்தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

யுத்த காலத்தின் போது அனைத்து சமூகத்தினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிர்கள், சொத்துக்கள், பொருளாதாரம் என்பன பாதிக்கப்பட்டன.

இவைகள் அனைத்தையும் விட இந்த நாட்டுக்காக போராடி உயிரிழந்தவர்களின் அர்ப்பணிப்பை நாம் என்றும் மறந்து விடக் கூடாது.

இன்று சட்டம், நிதி, ஒழுங்கு, நிர்வாகம் போன்றன அத்துறை சார்ந்தவர்களினால் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் இவ்வாறு சாந்தி, சமாதனம், அபிவிருத்தி எற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .