2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அரசியல் கட்சி என்பது வேதமோ, மார்க்கமோ அல்ல: ரிஷாத்

Sudharshini   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அரசியல் கட்சி என்பது வேதமோ, மார்க்கமோ அல்ல. அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் முதலில் விடுபடவேண்டும். அப்போதுதான் சமூகத்துக்கும் காலத்துக்கும் பொருத்;தமான சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்க முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் சனிக்கிழமை (31) லொயிட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,


முஸ்லிம் சமூகத்துக்கு கடந்த அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தல்களையும் துரோகங்களையும் செய்து வந்த போதிலும், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு சமூகத்துக்கான பல போராட்டங்களையும் அழுத்தங்களையும் செய்ய வேண்டிய அபிவிருத்திவேலைகளையும் மேற்கொண்டே வந்தோம்.


கடந்த அரசாங்கம் பலம் பொருந்தியதொரு நிலையிலேயே இருந்து வந்தது. இதனால், அரசைவிட்டு வெளியேறி மக்கள் உரிமைகளை வெல்வதற்கோ அல்லது அரசாங்கத்தை கவிழ்க்கவோ அக்கால சூழ்நிலைகள் பொருத்தமானதாக அமையவில்லை.


எனவே, அரசாங்கத்திலிருந்து கொண்டு மக்களுக்கு செய்ய வேண்டிய உச்சக்கட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் சமூகத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட வேளைகளில் உரிமைக்குரலாகவும் எமது கட்சியின் தலைமைத்துவம் இருந்து வந்துள்ளது.


சமூகத்தின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, மதிப்பளித்து எமது கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் கொழும்பு, கண்டி, திருகோணமலை. பதுளை, மட்டக்களப்பு போன்ற இடங்களிலெல்லாம் பழம்பெரும் கட்சியான முஸ்லிம் காங்கிரஸூடன் சற்று குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் எமது கட்சி ஆதரவைப் பெற்றுள்ளது. மேலும், 74க்கும் மேற்பட்டவர்கள்  அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்கின்றனர்.


ஆதலால்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் எமது சமூகத்துக்கான பணிகளை வழங்குவதுக்கு எமது கட்சி முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.


அம்பாறை மாவட்டத்தில் கடந்த 30 வருடகாலமாக வாக்களித்து கை தேய்ந்து போன இந்த சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள் எதைப்பற்றியும் வாக்குகளை பெற்றுச் சென்றவர்கள் பேசுவதுமில்லை முயற்சிகள் எடுப்பதுமில்லை. குறிப்பாக பொத்துவில் காணிப்பிரச்சினைகள், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள், அக்கரைப்பற்று சுனாமி வீட்டுத்திட்டமான நுரைச்சோலை 500 வீட்டுத்திட்டம், ஒலுவில் அஸ்ரப் நகர் பிரச்சினைகள் பற்றி பேசாமல் காலாகாலமாக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.


ஆகவேதான், எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக கால்பதிக்கவுள்ளது. எங்களுக்கு ஒரு முறை ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப்பாருங்கள் என்று கேட்டுக்ககொள்கின்றேன்.


மக்கள் பலத்தின் மூலம் எமது பேரம் பேசும் சக்தியை மேலும் மேலோங்கச் செய்து சமூகத்துக்;கான பணிகளையும் உரிமைகளையும் வழங்குவதுக்கான சந்தர்ப்பத்தை எமது கட்சி எதிர்பார்க்கின்றது.


எமது கட்சியின் வளர்ச்சியினாலும் கட்சி தலைமைத்துவத்தின் சாணக்கியத்தினாலும் ஆட்சி அமைக்கின்ற அரசாங்கங்கள் மக்கள் பணி செய்யக் கூடிய நல்ல அமைச்சுக்களை வழங்கி வருகின்றது. ஜி.ஜி.பொன்னம்பலம், லலித் அத்துலத்முதலி, ரணில் விக்ரமசிங்க, ஜி.எல்.பீரிஸ் ஆகிய பெரும் தலைவர்கள் வகித்த அந்த அமைச்சுப் பொறுப்புகள் எனக்கும் வழங்கப்பட்டுள்ளமை சமூகத்திற்கு கிடைத்த பெருமையாகும் என அவர் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .