2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'அ.இ.மு.கா. வளர்ச்சியில் வன்னி, மட்டு. பங்களிப்புச் செய்துள்ளது'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. அதனுடைய பலாபலனையும் இம்மாவட்டங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து பல அமைச்சர்களை, நாடாளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுள்ளீர்கள். ஆனால், தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கின்றீர்கள். எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக இப்பிரதேச மக்கள் வாக்களித்து எங்களுக்கு சந்தர்ப்பத்தை தாருங்கள். அவ்வாறு தருவீர்களானால் உங்களின் அத்தனை பிரச்சினைகளையும் தோளில் சுமந்து உங்களின் நலனுக்காக, அபிவிருத்திக்காக எங்களை அர்ப்பணிப்போம்.

நாவிதன்வெளி பிரதேச மக்களின் அழைப்பை ஏற்று அம்பாறை, மத்தியமுகாம் நகரிற்கு சனிக்கிழமை விஜயம் செய்த கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக வாக்களித்த மக்களின் பிரதேசங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகின்றோம். எதிர்காலத்தில் எமது சமூகத்தை சரியான பாதையிலே கொண்டுசெல்வதற்காக சரியான தலைமத்துவத்தை அடையாளம் கண்டு பெற்றுக்கொடுப்பதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்றால் மக்களுக்கு பணியாற்றுகின்ற பிரதிநிதிகளாக, மக்களின் கஸ்டங்களை, துன்பங்களை, துயரங்களை, எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை இந்த மண்ணுக்கும் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்காக இந்த பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலினால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல் கடைத்தொகுதி உட்பட பல அபிவிருத்தி பணிகள் இன்னும் இப்பிரதேசத்தில் முடிக்கப்படவில்லை என இங்குள்ளவர்களால் சுட்டிக்காட்ப்படுகின்றது.   மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் மரணித்து 10 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டநிலையிலும் அவரால் தொடங்கப்பட்ட வேலைகள் முடிவுறுத்தப்படாமல் இருப்பது வேதனையளிக்கின்றது. ஏன் நாம் வாக்களிக்கின்றோம். சமூகத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துகொண்டு சரியான பாதைக்கு இட்டு செல்வதற்காகத்தான் கட்சி தேவையாகவுள்ளது.

மர்ஹூம் அஷ்ரஃப் இந்தக் கட்சியை ஆரம்பித்தபோது கட்சியின் தேவைப்பாடு இருந்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமாக தலைமைத்துவம் இல்லாத சமூகமாக  அந்தரப்பட்டபோது துணிந்து வந்து கட்சி அமைத்து சமூகத்தை ஒருமுகப்படுத்தினார். இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைமை ஜனாதிபதி தேர்தலின் போது தபால் வாக்களிப்பன்று மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள் என்று சொன்னது. ஆனால் எமக்கு எத்தனை அச்சுறுத்தல்கள், கொலை அச்சுறுத்தல்கள் வந்த போதும், பெரிய பதவிகள் தந்திருந்த போதிலும் தைரியமாக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களியுங்கள் என தைரியமாக சொல்லும் அளவிற்கு இறைவன் தைரியத்தை தந்தான்' எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X