2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகளவான கட்டுப்பாடுகள் விதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ரீ.கே.றஹ்மத்துல்லா

அரசாங்கத்தின் உத்தரவாத நெல் கொள்வனவு மிகவும் மந்தகதியில் காணப்படுவதுடன், அதிகளவான கட்டுப்பாடுகளை நெல் சந்தைப்படுத்தல் சபை விதிப்பதினால் அச்சபையிடம் நெல்லை விற்பனை செய்வதில் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும் இரண்டு அல்லது மூன்று ஏக்கரில்   நெற்செய்கை மேற்கொள்வதாகவும் இதனால், அவர்களுக்கு விளைச்சலின் மூலம்  சுமார் 120, 150 நெல் மூடைகள் கிடைக்கின்றன. இந்த நிலையில், விவசாயி ஒருவரிடமிருந்து 40 நெல் மூடைகளை மாத்திரமே நெல் சந்தைப்படுத்தல் சபை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்கின்றது. ஏனைய நெல் மூடைகளை விற்பனை செய்வதில் தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவ்விவசாயிகள் கூறினார்.  

மேலும், தற்போது அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அறுவடை செய்யப்பட்ட தங்களின் நெல்லை மிகக் குறைந்த விலையில் தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றனர். கடந்த பெரும்போகத்தின்போது  65 கிலோகிராம் நிறை கொண்ட நெல் மூடையொன்றை 3,200 ரூபாய் படி தாங்கள் விற்பனை செய்ததாகவும் ஆனால், இம்முறை நெல் மூடையொன்று 1,800 ரூபாய் படி தங்களிடம் தனியார் வியாபாரிகள்  கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் கூறினர்.

தற்போது சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், நெற்செய்கைக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அறுவடை நெல்லுக்கான விலை வீழ்ச்சியானது தங்களின் முதல் பணத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பாரிய நஷ்டத்தை  எதிர்நோக்குவதாகவும் அவ்விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் கே.றத்நாயக்கவிடம் நேற்று திங்கட்கிழமை கேட்டபோது, 'மொத்த தேசிய நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் 20 சதவீத பங்களிப்பை செய்து வருகின்றது. இதற்கமைய இந்த மாவட்டத்தில் இம்முறை 25,000 மெற்றிக்தொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நிதி மற்றும் களஞ்சிய வசதிகளை நெல் சந்தைப்படுத்தல் சபை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  ஒரு கிலோ நீட்டு நெல் 45 ரூபாய் படியும் சம்பா நெல்  50 ரூபாய் படியும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உரமானியம் பெற்ற அத்தாட்சிப்பத்திரத்தை சமர்ப்பித்து ஈரப்பதன் அற்ற சுத்தமான நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் 40 நெல் மூடைகளை விவசாயி ஒருவர் விற்பனை செய்ய முடியும்' எனவும் தெரிவித்தார்.

மேலும், கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவை அதிகரிக்க  வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .