2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

குடும்பத்தை தாக்கிய கும்பல்; பிரதேச மக்கள் போராட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று 8ஆம் பிரிவு, வஸ்தியான் வீதியில் மாணவி ஒருவர் உள்ளிட்ட குடும்பமொன்று, கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக பிரதேச மக்கள் அமைதியான முறையில் இன்று (23) கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

“8 பேரை வெட்டியுள்ள போதும் எட்டிப்பாராத பொலிஸார்”, “வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்”, “வஸ்தியான் வீதியை விட்டு அவனை வெளியேற்றுங்கள்”, “சிறுவர் வன்முறையை தடுப்போம்” உள்ளிட்ட சுலோகங்களை, இந்தக் கவனயீர்ப்பில் கலந்துகொண்ட மக்கள் தாங்கி நின்றனர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்துக்குப் பொறுப்பானவர் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனும் மகஜரை, ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்டத்தினருக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் கையளித்தனர்.

அதனைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபர் வளர்க்கும் நாய், மலம் கழித்ததில் நேற்று முன்தினம் (21) ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் சண்டை ஏற்பட்டதாகவும் தாக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்த தாக்குதலை மேற்கொண்டவரின் தலைமையிலான கும்பலொன்று, பொல்லு, கம்பி, தடிகள் சகிதம் சாரமரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இன்னுமொருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இதில் வலது கையில் காயமடைந்த இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவியும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இதற்கு முன்பும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவித்தே பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க, குறித்த நபரை இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவரின் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .