2020 நவம்பர் 28, சனிக்கிழமை

துறைமுக நுழைவாயிலுள்ள மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒலுவில் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின், ரெஜர் கப்பல் மூலம் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாக கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா, பிரதி அமைச்சர் ஹரீசிடம் உறுதியளித்துள்ளார்.

குறித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் இயந்திர படகுகள் செல்லும் பாதையில் மண் நிரம்பியுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீனவ சங்கங்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து, நேற்று (10) மாலை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சாவை, அவரது அமைச்சு அலுவலகத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்தித்து, அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் குறித்த பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தி கூறியபோது மேற்படி உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

கடந்த முறை இவ்வாறான ஒரு நிலை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட போது தான் மேற்கொண்ட முயற்சியினால் மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் 'ரெஜர் சயிறு' கப்பல் மூலம் மண் அகற்றப்பட்டமையினை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் ஹரீஸ்,  இச்சந்தர்ப்பத்திலும் குறித்த கப்பலைப் பயன்படுத்தி மீன்பிடி துறைமுகு நுழைவாயிலில் நிரம்பியுள்ள மண்னை அகற்றும் பணியினை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

 

இதனையடுத்து, மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபன தலைவர் சுதர்சன மற்றும் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளை அமைச்சர் விஜயமுனி சொய்சா உடனடியாக அமைச்சுக்கு அழைத்து, ஒலுவில் பிரதேசத்தில் ரெஜர் கப்பல் தரித்து நின்று குறித்த மண்ணை அகற்றும் பணியினை முன்னெடுப்பதற்கான கள ஆய்வினை மேற்கொள்வதற்கு பொறியியலாளர் குழு ஒன்றை அனுப்புமாறும் அக்கப்பல் செல்வதற்கு முன்பாக பெக்கோ இயந்திரத்தின் மூலம் மண்ணை அகற்றி படகுப் பாதையை சீர் செய்து மீனவர்களின் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--