2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

‘முஸ்லிம் தலைமைகளுக்கு அபகீர்த்தியை உண்டாக்க முயற்சி’

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“முஸ்லிம்களை இலக்குவைத்து, முஸ்லிம் தலைமைகளுக்கு அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவரை இலக்குவைத்துச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைது விவகாரம் தொடர்பில் இன்று (15) அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நாட்டில் இனவாத முரண்பாடுகளை உண்டாக்கி, நாட்டைச் சீரழிக்கத் துடிக்கும் சில பேரினவாத சக்திகளின் அராஜகங்களுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல.  

“சகல இனங்களுக்கும் சமமான உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அரசாங்கமே, ஜனநாயகக் கடமையைச் செய்வித்த முன்னாள் அமைச்சர் ஒருவரை கேள்விக்குட்படுத்தி, கைது செய்ய எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  

“இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை குற்றமாகச் சுமத்தி, அவரைக் கைதுசெய்ய முனைவது கவலையளிக்கிறது” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X