2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சிங்கள ஆவணத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை - சம்மாந்துறை கல்வி பணிப்பாளர்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யூ.எல்.மப்றூக்)

சம்மாந்துறை கல்வி வலயத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாதவாறு அழைப்பிதழ் பிந்திக் கிடைத்தமைக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனையிலுள்ள உத்தியோகஸ்தர் ஒருவரே காரணமாகியுள்ளார் எனவும் சிங்களத்தில் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தமையினால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் சம்மாந்துறை வலயக் கல்வில் பணிப்பாளர் மன்சூர் தெரிவித்துள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்குத் தெரிவாகியிருந்த சம்மாந்துறைக் கல்வி வலய மாணவர்களுக்கான அழைப்புக்கள் தாமதமானமைக்கும், அதன் காரணமாக, குறித்த மாணவர்கள் மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனமைக்கும் காரணம் யார் என வினவியபோதே சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதன்கிழமையன்று இடம்பெறவிருந்த மேற்படி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான அழைப்புக்களையும், அவை தொடர்பான ஆவணங்களையும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினர் அதே தினம், குறித்த மாணவர்களின் பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதுகுறித்து பணிப்பாளர் மன்சூர் மேலும் கூறுகையில், "புதன்கிழமை போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை 2.00 மணியளவிலேயே கிடைத்தது. அதன் காரணமாகவே ஒருசில மாணவர்களின் பாடசாலை நிருவாகத்திடம் அழைப்புக்களை நேரகாலத்துடன் கொடுக்க முடியவில்லை.

இவ்வாறு இந்த அழைப்புகள் எமக்கு தாமதமாகக் கிடைப்பதற்குக் காரணமானவர் கிழக்கு மாகாணக் கல்விப்பணிமனையிலுள்ள ஒருவர்தான்" என்றார். இதேவேளை, மேற்படி விடயம் தொடர்பில் தமது மேலிடத்திலிருந்து தமக்கு சிங்களத்தில் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தமையால் அவற்றினை விளங்கிக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால்தான், மாணவர்களுக்கான அழைப்பினை உரிய காலநேரத்துக்குள் ஒப்படைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம் மற்றும் வேம்படி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலை மாணவர்கள் மேற்படி தாமதமாகிய அழைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய அதிபர் பி.இலட்சுமணன் கூறுகையில், "எமது பாடசாலை சார்பாக இம்முறை தேசியமட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்கு எஸ்.லோகேஸ்வரி (17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400, 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டம்) மற்றும் கே.சாந்தினி (400 மீற்றர் தடைதாண்டி ஓட்டம்) ஆகிய இரு மாணவிகள் தெரிவாகியிருந்தனர்.

அவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் புதன்கிழமை மதியம் இடம்பெற்றது. ஆனால், அதற்கான அழைப்பை சம்மாந்துறை கல்வி வலய அலுவகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் எம்மிடம் அதேநாள் காலை 8.30 மணியளவில்தான் ஒப்படைத்தார். நாவிதன்வெளியிலிருந்து கொழும்புக்கு அத்தனை விரைவாகச் செல்ல முடியாது. அதனால், எமது மாணவிகளால் அப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.

சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் இந்நிகழ்வானது பெருத்த கவலையினையும், ஏமாற்றத்தினையும் கொடுத்துள்ளது. நல்லதொரு வாய்ப்பினை இந்த மாணவிகள் இழந்து விட்டனர்" என்றார். 

வேம்படி கலைமகள் வித்தியாலய மாணவியின் அதிபர் எஸ்.பாலசிங்கம் இது குறித்து பேசுகையில், "எமது பாடசாலையைச் சேர்ந்த எஸ்.தமிழ்ச்செல்வி எனும் மாணவி தேசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த மாணவியை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் கடிதமும் அது தொடர்பான ஆவணங்களும் புதன்கிழமை காலைதான் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் இந்த ஆவணங்களை ஒப்படைத்தார். ஆனால், குறித்த மாணவி கலந்து கொள்ளும் போட்டி நிகழ்ச்சியும் புதன்கிழமைதான் இடம்பெற்றன. இதனால், மாணவி தமிழ்ச்செல்வியால் அவரின் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை" என்றார்.

இது தொடர்பில் மாணவி தமிழ்ச்செல்வி கூறுகையில், தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் ஆவலுடன் இருந்த தனக்கும், தனது பெற்றார், ஆசிரியர்களுக்கும் இச்சம்பவம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். தனக்கான அழைப்பு தாமதித்து அனுப்பப்பட்டுள்ளதால், தேசிய மட்டத்தில் சாதிக்க வேண்டும் எனும் தனது ஆசை நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தவிர, மேலும் சில பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அழைப்புக்கள் இதேபோன்று தாமதித்தே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவிக்கப்படுகிறது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் உதயரட்ணத்திடம் கேட்டபோது, கடந்த 22 ஆம் திகதியன்று தான் திருமலையிலிருந்து சம்மாந்துறையிலுள்ள கல்விப்பணிப்பாளர் மன்சூரின் வீட்டிற்குச் சென்றதாகவும் அங்கு அவர் இல்லாததால் வீட்டாரிடம் மேற்படி அழைப்பிதழ்களை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.

அதேவேளை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்கான கையேட்டில் தமிழ் மொழியிலும் விபரங்கள் இருப்பதாகவும்  தமிழ் மிரருக்கு மாகாண விளையாட்டுத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் உதயரட்ணம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--