2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும்

Editorial   / 2021 ஜனவரி 20 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கையைத் தணிக்கும் அகழ்வு

தொல்பொருள் அகழ்வு இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் பரவலாக முன்னெடுக்கப்படும் ஓர் அகழ்வாராச்சியாகும். ஆனால், முல்லைத்தீவு குருந்தூரில் மட்டுமே புதுமையான முறையில் மதவழிபாடுகளுடன் இராணுவம் புடைசூழ வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பது உலகில் எங்குமே காணக்கிடைக்காத மிக அரிதான நிகழ்வாகும்.

முற்கால மக்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் பொருள்கள் கருவிகள், கட்டிட இடிபாடுகள் ஆகியனவற்றின் எச்சங்களை தேடியகழ்வதே தொல்பொருள் அகழ்வாராச்சியென இதுவரையிலும் அர்த்த நிரூபணம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், புத்தர் சிலையொன்று புதிதாய் நாட்டப்பட்டு, தேசிய மரபுரிமைகள், கிராமிய, கலை, கலாசார, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவால் வைபவரீதியான அகழ்வாராச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அகழ்வாராச்சியாளர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழர்களுக்கே சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள முமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக் கல்லு பகுதிகளில் இரண்டு விகாரைகள் இருந்தமைக்கான சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்தே மிகக் கச்சிதமாய் நடப்பட்டுள்ளது.

நெடுங்காலமாகச் சென்று பொங்கல் ​பொங்கி தமிழர்கள் வழிபட்ட, ஆதிசிவன் அய்யனார் ஆலயத்திலிருந்த சூலத்தை பிடுங்கியெறிந்து ஆலயச் சின்னங்கள் யாவும் நிர்மூலமாக்கியதன் ஊடாக, ஆலயம் இருந்தமைக்கான தடையங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புதிதாக புத்தர் சிலையொன்றை நட்டிருப்பதன் ஊடாக, பௌத்த மத சின்னங்களை தேடும் செயற்பாடே முன்னெடுக்கப்படும். அது ‘அகழ்வாராச்சி’ அல்ல. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அகழ்வாராச்சி ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மை உறுப்பினர்கள் உட்சேர்த்துக்கொள்ளப்படவே இல்லை. இதனூடாக அகழ்வாராச்சியின் போர்வைக்குள் எல்லாமே முற்றாக மூடிமறைக்கப்பட்டுவிடும்.

தொல்பொருள்கள் நாட்டின் எப்பாகத்திலும் இருக்கலாம். ஆனால், வடக்கில் மட்டுமே முன்னெடுக்கப்படும் தொல்பொருள் தேடுதல் வேட்டை, ஏதோவொரு வேட்கையைத் தணிக்கும் செயற்பாடாக மட்டுமே இருக்குமென்பதில் ஐயமில்லை.

புத்தர் நட்டப்பட்டதன் பின்னர், இந்துக்களின் தடையங்கள் அகழ்வாராச்சியில் கண்டெடுக்கப்படும் என்பதெல்லாம் பகல் கனவு. ஏனென்றால்,  குருந்தூரில் ஆரம்பமே மிகமோசமான, உலகில் எங்குமே கடைப்பிடிக்காத நடைமுறையாகவே இருந்தது.

ஓர் அரசியல் ​தலையீடு, இராணுவ பின்புலத்துடனான அகழ்வாராச்சியில் பௌத்த சின்னங்களே தடையங்களாக நிச்சயம் கிடைக்கும். அது தெட்டத்தெளிவானது இந்த அராஜகம் வடக்கில் பௌத்த மதத்தையும் அதனோடிணைந்த குடியேற்றங்களுக்கு மட்டுமே வழிசமைக்கும்.

ஆகையால், தொல்பொருள் ஜனாதிபதியின் செயலணியின் சிறுபான்மையினர் உள்ளடக்கப்படாத வரையிலும் இவ்வாரான பலவந்த அரங்கேற்றங்களே இடம்பெறும். அதனை தடுப்பதும் தட்டிக்கேட்பது ஆளும் தரப்பிலிருக்கும் சிறுபான்மையினரின் கைகளிலேயே உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .