2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ப. சிதம்பரத்தின் பிணை மனு மீதான தீர்ப்பு: திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிணை மனு மீதான தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மத்திய விசாரணை முகவரக (சி.பி.ஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன்பிணை வழங்கியது.

இதற்கிடையே, இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் இருக்கும் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். அமலாக்கப்பிரிவு வழக்கில் ப. சிதம்பரம் தரப்பில் பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயித், அவருக்கு பிணை வழங்க மறுத்து தீர்ப்பு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ப. சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

முன்னதாக, சிதம்பரத்துக்கு பிணை வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை தனது வாதத்தில் குறிப்பிட்டது. மேலும், சி.பி.ஐ வழக்கில் மட்டுமே ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற கீழ்ச்சபை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு பிணை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .