2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

‘அணுவாயுதங்கள் இல்லாத சமாதானமான இடமாக கொரியா’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • வட - தென் கொரியத் தலைவர்கள் உறுதி
  • தென்கொரியா செல்கிறார் கிம்
  • ஏவுகணைச் சோதனைத் தளங்களை அளிக்க உறுதி
  • அணுவாயுதத் தளமும் அழிக்கப்படலாம்

அணுவாயுதங்களும் அணுவாயுத அச்சுறுத்தல்களும் இல்லாத, “சமாதானமான இடமாக”, கொரியத் தீபகற்பத்தை மாற்றுவதற்கு, தாமிருவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், நேற்று (19) தெரிவித்தனர். இதை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இணக்கம் காணப்பட்டுள்ளது என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மூன்று நாள் விஜயமாக வடகொரியா சென்றுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன், வடகொரியத் தலைவர் கிம்மை, இரண்டாவது நாளாக நேற்றும் சந்தித்தார். இருவருக்குமிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இணைந்த ஊடகச் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களும், மூன்றாவது தடவையாகவே, இம்முறை சந்தித்துள்ளனர். இதற்கு முன்னைய சந்திப்புகளை விட இச்சந்திப்புகளில், அணுவாயுதமழிப்புத் தொடர்பில், அதிகமான கவனம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், அதிக கவனத்தை ஈர்த்த சந்திப்புகளாக இவை அமைந்திருந்தன.

இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித் போது, தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு விஜயம் செய்வதற்கு, வடகொரியத் தலைவர் கிம் உறுதியளித்தார். வடகொரியாவின் தலைவரொருவர், தென்கொரியத் தலைநகருக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. இவ்விஜயம், இவ்வாண்டு இறுதியில் இடம்பெறுமென எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதி மூன் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை, ஒருதலைப்பட்சமாகவே வடகொரியா நிறுத்தியுள்ள போதிலும், அதனிடம் காணப்பட்ட ஒரே அணுவாயுதச் சோதனைத் தளத்தை இல்லாது செய்யும் நடவடிக்கை, இவ்வாண்டு மேயில் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அது அனுமதித்திருக்கவில்லை. எனவே, அந்நடவடிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனம் காணப்பட்டது.

இந்நிலையில் தான், வடகொரியாவின் வடமேற்கு நகரமான டொங்சாங்-றி பகுதியிலுள்ள ஏவுகணைச் சோதனைத் தளத்தையும் ஏவல் தளத்தையும் இல்லாது செய்யும் நடவடிக்கையின் போது, ஏனைய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அதைப் பார்வையிட அனுமதிக்கப்படுமென, வடகொரியத் தலைவர் உறுதியளித்தாரென, ஜனாதிபதி மூன் குறிப்பிட்டார். இந்தத் தளத்தில் வைத்தே, ஐக்கிய அமெரிக்காவைச் சென்றடையக்கூடிய, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருந்தன.

அதேபோன்று, தமது நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை ஐ.அமெரிக்கா மேற்கொள்ளுமாயின், யொங்பியோன் பகுதியிலுள்ள, தமது பிரதான அணுசக்தி வசதிகளை இல்லாது செய்வதற்கான தயார்நிலையையும், வடகொரியா வெளிப்படுத்தியது என, ஜனாதிபதி மூன், இதன்போது குறிப்பிட்டார். ஆனால், ஐ.அமெரிக்காவிடமிருந்து என்னவாறான நடவடிக்கைகளை வடகொரியா எதிர்கொள்கிறது என்பதை, இரு தலைவர்களும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

வடகொரியத் தலைவர் கிம்மும் ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜூனில் சந்தித்துப் பெற்றுக்கொண்ட இணக்கங்களைப் போல, இம்முறை எட்டப்பட்டுள்ள இணக்கங்களுக்கும், காலக்கெடு எதுவும் காணப்படவில்லை. ஆனால், சிங்கப்பூர் சந்திப்பை விட, விரிவான இணக்கப்பாடுகள் இம்முறை எட்டப்பட்டுள்ளன. அத்தோடு, தென்கொரியாவுக்கு விஜயம் செய்வதற்கு, வடகொரியத் தலைவர் முன்வந்தமை, சம்பிரதாயபூர்வமாக, முக்கியமான ஒரு விடயமாகக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--