2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அநீதிக்காக மன்னிப்புக் கோரியது தாய்வான்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் சுதேச மக்கள், கடந்த பல நூற்றாண்டுகளாகச் சந்தித்துவந்த வேதனைகளுக்காக, அந்நாட்டின் ஜனாதிபதி சாய் இய்ங்-வென், மன்னிப்புக் கோரியுள்ளார். அவ்வாறு மன்னிப்புக் கோரிய, அந்நாட்டின் முதலாவது தலைவர் இவராவார்.

தாய்வானின் முதலாவது பெண் ஜனாதிபதியும் பழங்குடிப் பரம்பரையில் வந்த முதலாவது தலைவருமான சாய், சுதேச மக்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக செயற்குழுவொன்றை அமைத்துள்ளதோடு, அதற்குத் தலைமையும் தாங்கவுள்ளார். சுதேச மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்படும் பதற்றமான நிலைமையைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

"சுதேச மக்களிடம் அரசாங்கத்தின் சார்பாக நான் மன்னிப்புக் கோருகிறேன். கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களது வேதனைகளுக்காகவும் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் நான் ஆழ்ந்த மன்னிப்பைக் கோருகிறேன்" என அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "வரலாற்றை நாங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும், அத்தோடு உண்மையைப் பேச வேண்டும்" எனத் தெரிவித்ததோடு, மன்னிப்புக் கோருதலென்பது, ஒரு படி முன்னே செல்வதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

தாய்வான் சனத்தொகையில் சுமார் 2 சதவீதமாக உள்ள சுதேச மக்கள், சீனாவிலிருந்து குடியேற்றவாசிகள் வந்திறங்கியதைத் தொடர்ந்து, தங்களது பாரம்பரிய கலாசாரம் அழிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அவர்களது நிலங்களில் பெரும்பாலானவை, தேசியப் பூங்காங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் உணவுகளைத் தேடுவதற்கும் சவாலை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .