2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவில் பிளவு இல்லை: ஒபாமா

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டலஸில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களாலும் அதற்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பின இளைஞர்கள் இருவரின் கொலைகளாலும், அமெரிக்கா பாரியளவில் பிளவுபட்டுள்ளது என்ற கருத்தை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிராகரித்தார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதியான பராக் ஒபாமா, தனது ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமைதியான முறையில் தனது ஆட்சிக்காலத்தை முடிவுசெய்ய விரும்புகிறார். ஆனால், ஆயுத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகள், குடியரசுக் கட்சியினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும், அடிபட்டுப் போகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவர் உரையாற்றும் போது, ‘முதலில், இந்த வாரமானது எவ்வளவு வலிதருவதாக இருந்தாலும், சிலர் சொல்லுமளவுக்கு, அமெரிக்கா பிளவுபட்டிருக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

நாட்டில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது எனவும், 1960களில் காணப்பட்ட நிலைமைக்கு நாடு திரும்பியுள்ளது எனவும் சொல்வது, உண்மையானது அன்று எனத் தெரிவித்த ஜனாதிபதி ஒபாமா, "கலவரங்களை நீங்கள் காணவில்லை, அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மன்னிக்க முடியாத ஒன்று எனத் தெரிவித்த அவர், டலஸிலோ அல்லது வேறெங்கிலுமோ, பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக அனைத்து இனப்பிரிவினரும் கோபமடைவது சரியானது எனத் தெரிவித்தார். அதேபோல், கறுப்பின இளைஞர்களான ஸ்டேர்லிங், கஸ்டிலே ஆகியோரின் மரணங்கள் தொடர்பாகக் கோபமடைவது நியாயமானது எனவும் தெரிவித்தார்.

டலஸில் தாக்குதல் மேற்கொண்ட கறுப்பின நபர், ஆபிரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதி அல்லர் எனத் தெரிவித்த அவர், சார்லெஸ்டனில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலை மேற்கொண்ட நபர், வெள்ளையின அமெரிக்கர்களின் பிரதிநிதியாக எவ்வாறு கருதப்பட முடியாதோடு, அவ்வாறே இந்த நபரும் எனவும் குறிப்பிட்டார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .