2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தான் வைத்தியசாலை மீதான குண்டுவீச்சு போர்க் குற்றமாகலாம்: ஐநா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்திலுள்ள மருத்துவமனை மீதான அமெரிக்க தலைமையிலான வான் தாக்குதலில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் 12 பேர் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பென்டகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இது மன்னிக்கமுடியாதது எனவும் குற்றமாக இருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையக் கோரியுள்ள ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், நீதிமன்ற சட்டங்களின்படி, இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டது என வெளிப்படுத்தப்படுமானால், வைத்தியசாலையின் மீது வான் தாக்குதல் நடாத்தப்பட்டது போர்க்குற்றமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் முற்றிலும் துன்பகரமானது எனவும் மன்னிக்க முடியாதது எனவும் ஒருவேளை குற்றமாக இருக்கலாம் எனவும் ஷெய்ட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டதாகவும், தவிர 19 எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் பணியாளர்களும், 18 நோயாளர்களும், அவர்களோடு தங்கியிருப்போரும் உள்ளடங்கலாக 37 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல் அருவருக்கத்தக்கது எனவும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல் எனவும் எல்லைகளற்ற வைத்தியர் அமைப்பின் மெய்னி நிக்கோலாய் தெரிவித்துள்ளனர். நாங்கள் கூட்டணிப் படைகளிடம் இருந்து முழுமையான வெளிப்படைத்தன்மையை எதிர்பார்ப்பதாகவும், பயங்கரமான இந்த உயிரிழப்பை உள்நோக்கமற்றது எனத் தட்டிக்கழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் மீது கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக குண்டுமழை பொழிந்த போது எல்லைகளற்ற மருத்துவர்களின் அதிகாரிகள் பதற்றத்துடன் நேட்டோவுக்கும், வொஷிங்டனுக்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

துன்பகரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அமெரிக்க மக்களின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலையமாக ஆயுதம் தரித்த தீவிரவாதிகள் குழுவொன்று வைத்தியசாலையை பாவித்ததாக காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள போதும், எந்தவொரு போராளிகளும் வைத்தியசாலையில் இருக்கவில்லை என எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .