2021 மே 12, புதன்கிழமை

உத்தியோகபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 13 மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக, குடியரசுக் கட்சியின் சார்பில் தெரிவாக விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தபோது, அவருக்கான வாய்ப்புகள் இல்லையென்றே ஏறத்தாழ அனைவரும் கருதினர்.

ஆனால், 13 மாதங்களின் பின்னர், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ட்ரம்ப். கிளீவ்லன்டில் இடம்பெற்றுவரும் அக்கட்சியின் தேசிய மாநாட்டில் வைத்தே, இலங்கை நேரப்படி நேற்றுக் காலையில், அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

தொழிலதிபர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்/தொகுப்பாளர் என்ற பரிணாமங்களைக் கொண்ட ட்ரம்ப், ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கப் போவதாக, பல ஆண்டுகளாகத் தெரிவித்து வந்த போதிலும், அவர் ஒருபோதும் குதித்ததில்லை. ஆனால், அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவர். குறிப்பாக, பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் இருவருடனும் நெருங்கிப் பழகியவர். ஆனால் பின்னர், பழைமைவாதிகள் பக்கமாகச் சேர்ந்துகொண்டார்.

தேர்தலில் குதித்த டொனால்ட் ட்ரம்ப்புக்கு, 16 பேர் எதிராளிகளாக இருந்தனர். அவர்களில் அனேகமானோர், பழுத்த அரசியல்வாதிகள். டொனால்ட் ட்ரம்ப்போ, இனவாதத்தையும் பிரிவினையையும் கடும்போக்குக் கருத்துகளையும் மாத்திரமே நம்பிக் களமிறங்கியிருந்தவர் போன்று தென்பட்டது. அவருக்கு வாய்ப்பே இல்லையென, அரசியல் நிபுணர்கள் அடித்துக் கூறினர்.

ஆனால், தனது போட்டியாளர்களை ஒவ்வொருவராக வீழ்த்திய ட்ரம்ப், கட்சியின் முன்னிலையை இலகுவாகப் பெற்றுக் கொண்டார். இறுதியில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் குழப்பம் தொடர்ந்தும் நிலவ, டொனால்ட் ட்ரம்ப்போ, இலகுவாக உத்தேச வேட்பாளரானார்.

தேசிய மாநாடு என்பது, வெறுமனே சம்பிரதாயபூர்வமான நிகழ்வு மாத்திரமே. ஆனாலும் கூட, ட்ரம்ப்புக்கு எதிரான பிரிவினர், அவருக்கெதிரான வாக்கெடுப்பொன்றை மேற்கொள்வதற்கு முயன்று, குழப்பத்தை ஏற்படுத்தினர். அந்த முயற்சியும் தோற்கடிக்கப்பட, பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதன்போது, தெரிவுக்குத் தேவையான 1,237 பிரதிநிதிகளை அவர் இலகுவாக வென்றார். அவருக்கு 1,725 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ வேட்பாளராக அவர் உறுதிப்படுத்தப்பட்டார்.

உப ஜனாதிபதிப் பதவிக்காக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்த வேட்பாளரான இன்டியானாவின் ஆளுநர் மைக் பென்ஸ் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இதனையடுத்து, நவம்பர் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஹிலாரி கிளின்டனை (இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்து 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவாகவுள்ளார் ஹிலாரி) எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .