2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘உயர்பொறுப்புகளில் உள்ளவர்களிடம் முறையிட்டு ஆட்சியை அகற்​றுவோம்’

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குடியரசுத் தலைவர், ஆளுநர் மற்றும் சட்டமன்றம் வரை முறையீடு செய்து, மக்களை திரட்டி, இந்த ஆட்சியை அகற்றுவோம்” என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சூளுரைத்துள்ளார்.  

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது,
அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, மில்லியன் கணக்கில் பேரம் பேசப்பட்டதாக, மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் உரையாற்றிய காணொளி தொடர்பில், அவர் ​நேற்று முன்தினம் (12) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  

“தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல என்று, வாக்களித்த மக்களே அதிருப்தியடைந்துள்ள நிலையில், பணத்துக்கும் பதவிக்கும்தான் பேரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் முகமாக வெளியான காணொளியால், அ.தி.மு.க ஆட்சியாளர்கள், தமிழகத்தின் பெருமையை, இந்திய அளவில் சீரழித்திருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பைத் தள்ளி வைக்கவும், சுதந்திரமாக வாக்களிக்க விடுமாறும், இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறும், போராடினோம். சட்டமன்றத்தில், பொலிஸாரை ஏவி விட்டு, என்னை குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போட்டு, ஜனநாயகப் படுகொலை செய்தனர். 

“ஊரார் பார்வைக்கு உத்தமர்கள் போல வேடம் போட்டுக்கொண்டு, ஆன்மா, தியானம், தர்மயுத்தம் என வார்த்தைக்கு வார்த்தை வண்ணம் பூசியவர்களும், சமாதியில் சபதம் செய்தவர்களும், எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது, இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

“ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துள்ள, மக்கள் விரோத அ.தி.மு.க அரசாங்கம், இனியும் நீடிப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும். இது குறித்து, உயர் பொறுப்புகளில் உள்ளோரிடமும் இது குறித்து முறையிடப்படும். மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போர்க்களத்தை, தி.மு.க. தலைமையேற்று வழிநடத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X