2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

குஷ்பூ - தமிழிசை குடுமிப்பிடி

Editorial   / 2017 மே 26 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பாளரான குஷ்பூ சுந்தருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான டொக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையில், டுவிட்டர் இணையத்தளத்தில், கடுமையான சண்டை மூண்டது.

“தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையை, இப்போது தான் வாசித்தேன். அம்மணி, கட்சியொன்றின் கொள்கைகளுக்காகவும் அதன் உணர்திறனுக்காகவும், ஆட்கள் சேர வேண்டும். ரஜினிகாந்தை, உங்கள் கட்சியில் சேருமாறு அனைத்து வகையிலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கெஞ்சி வந்தீர்கள். காங்கிரஸ் கட்சியின் நான் சேர்ந்தமைக்கு, அக்கட்சியில் நான் நம்பிக்கை கொண்டமை தான் காரணமாகும். எனக்குத் தூது அனுப்பியோ அல்லது அவர்கள் என்னைச் சேருமாறு கேட்டோ நான் சேரவில்லை. உங்களைப் பார்க்கும் போது, நான் எடுத்த முடிவு சரியானது என்பது விளங்குகிறது” என்று, தன் பக்கக் கருத்தை, குஷ்பூ ஆரம்பித்து வைத்தார்.

அதற்குப் பதிலளிக்க தமிழிசை, “சேர்ந்தீர்களா இல்லை கட்சி தாவினீர்களா? தி.மு.கவில் சேர்ந்துவிட்டு, அங்கிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தமை, சிறப்பான கொள்கை தான். என்னவாறான கொள்கை அது? அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து கோபமாகப் பதிலளித்த குஷ்பூ, “உங்கள் மூளையை, கொஞ்சம் சரிப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மணி.

தி.மு.கவிலிருந்து விலகி சுமார் 6 மாதங்களின் பின்னரே, காங்கிரஸில் நான் சேர்ந்தேன். காங்கிரஸிலிருந்து விலகுபவர்களை, அதே நாளில் நீங்கள் சேர்ப்பது என்னவாறு?” என்று கேள்வியெழுப்பினார். அத்தோடு, “ஏனையோரின் மூளையைப் படிப்பதில் நீங்கள் சிறந்தவர் என்றால், என்னுடைய கொள்கையை வெளிப்படுத்துங்கள். என்னை நம்புங்கள், உங்களது புரிதலுக்கு அப்பாற்பட்டது தான் அது. உங்களை நீங்களே அதிகம் வருத்திக் கொள்ளாதீர்கள்” என்றும் கூறினார்.

தமிழில் பதிலளித்த தமிழிசை, “தங்களைச் சேர்க்க, காங்கிரஸிலிருந்து தூதர்கள் வரவில்லை. ஆனால், தங்களை

தி.மு.கவிலிருந்து துரத்துபவர்கள் இருந்தார்களே?” என்று கேள்வியெழுப்ப, “மீண்டும் தவறான புரிதல், அம்மணி. தி.மு.கவிலிருந்து நான் ஏன் விலகினேன் என்பதை அறிவதற்கு, நீங்கள் என்னுடைய தனிப்பட்ட உதவியாளரோ அல்லது ஊடகத் தொடர்பாளரோ அல்லர். உங்களைப் போன்ற ஒருவர், வதந்திகளையோ அல்லது ஊடகச் செய்தியையோ நம்புவது, கவலைக்குரியது” என்றார்.

குஷ்பூவின் மூளை பற்றிய பதிலுக்குப் பதிலளித்த தமிழிசை, “நன்றி. நான் வைத்தியர் என்பதால், ஏனையோரின் மூளைகளை அறிவதில் வல்லவர். ஏனையோரின் மூளைகளை ‘ஸ்கான்’ செய்வது தான் என்னுடைய நிபுணத்துவம்” என்றார். அதற்குப் பதிலளித்த குஷ்பூ, “அம்மணி, எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். நீங்கள், மனநல நிபுணராகவா அல்லது பொது வைத்தியராக நிபுணத்துவம் பெற்றீர்கள்? அத்தோடு, நோயாளிகளைப் பற்றி அறிவதற்கு, அவர்களை வைத்தியர்கள் சந்திக்க வேண்டுமென்றல்லவா நான் நினைத்திருந்தேன்?” என்று குறிப்பிட்டார்.

இதன்போது, ரஜினிகாந்தைக் கட்சியில் சேர்ப்பது பற்றிய கருத்துக்குப் பதிலளித்த தமிழிசை, “நல்ல மனிதர்களை, முயற்சிசெய்து கட்சிக்குள் கொண்டுவருவது, பிச்சையெடுப்பது அன்று. வார்த்தைகள், எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன” என்று குறிப்பிட, “உங்களுடைய சொந்த வார்த்தைகளுக்கான பதில் அது, அம்மணி. நீங்கள் சொன்னதை ஞாபகப்படுத்துங்கள். எல்லாவற்றையும் நீங்கள் எவ்வாறு ஆரம்பித்தீர்கள் என்பதையும் ஞாபகப்படுத்துங்கள். செயற்பாடுகள், எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன தான்” என்று, குஷ்பூ பதிலளித்தார்.

இவ்வாறு நீண்ட அவர்களது டுவிட்டர் சண்டையை, ஏராளமான இணையப்  பயனர்களும் பார்வைிட்டதோடு, தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .