2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு அலெப்போவிலிருந்து போராளிகள் வெளியேற அனுமதி?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் மோதல் தீவிரமடைந்துள்ள அலெப்போவின் கிழக்குப் பகுதியிலுள்ள போராளிகள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கான திட்டமொன்று, ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு அலெப்போவில் சிக்கியுள்ள பொதுமக்களுடன் போராளிகளும் இணைந்து, பாதுகாப்பாக வெளியேறும் நிலை ஏற்படக்கூடும்.

இந்தத் திட்டம் தொடர்பான கடிதங்கள், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டை எதிர்த்துப் போராடும் போராளிக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமாயின், கிழக்கு அலெப்போவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு அலெப்போவைக் கைப்பற்றுவதற்காக, நவம்பர் மாத நடுப்பகுதியில், ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய அரசாங்கப் படைகள் ஆரம்பித்த போர் நடவடிக்கை காரணமாக, கிழக்கு அலெப்போவின் ஏறத்தாழ 93 சதவீதம், போராளிகளால் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், மிகக்குறுகிய பகுதிக்குள், போராளிகள் முடக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டதைப் போன்று, போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்ட பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கச் சுருங்க, அங்குள்ள பொதுமக்களின் செறிவு அதிகரிக்கும். எனவே, மக்களுக்கான பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுக்கு மத்தியிலேயே, அமெரிக்க ஆதரவுடனான, போராளிகளின் வெளியேற்றம் என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு, போராளிகள் தரப்பிலிருந்து இன்னமும் பதில் வழங்கப்படவில்லை என்று அறிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, கிழக்கு அலெப்போவில் உள்ள போராளிகள், "கௌரவமான" முறையில் வெளியேறுவது உறுதிப்படுத்தப்படுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, எதிரணிப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தம்முடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, எந்தவோர் ஒப்பந்தமோ அல்லது இணக்கமோ ஏற்படுத்தப்படவில்லை என்று மறுத்துள்ள ரஷ்யா, இதுவரையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கிறது. எனவே, எதனடிப்படையில் இந்தத் திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது என்பது தொடர்பில் கேள்வி எழுகிறது.

ஆனால், அமெரிக்காவின் திட்டப்படி, போராளிகள் அனைவரும் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேறினால், அல்-அசாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக அமையும். நான்கு ஆண்டுகளாக, அசாட்டைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காகப் போரிட்ட போராளிகள், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெளியேறியதாகவே கருதப்படும்.

மறுபக்கமாக, போராளிகள் வெளியேறினாலும் கூட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து அசாட் எதிர்கொள்ளப் போகும் சவால்கள், சிரியாவை அமைதிக்குள் வைத்திருக்குமா என்பதுவும் சந்தேகமே. குறிப்பாக, சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த பல்மைரா நகரை, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இழந்த ஐ.எஸ்.ஐ.எஸ், அந்த இடத்தை மீளக் கைப்பற்றியது. ஆனால், உடனடியாகவே அந்த இடத்திலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் விரட்டியடிக்கப்பட்டது.

எனினும், ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில், மீண்டும் ஒன்றுகூடிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள், பல்மைராவை மீளக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம், சிரியப் படையினருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, போராளிகள் வெளியேற்றப்பட்டாலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மூலம் முன்வைக்கப்படவுள்ள எதிர்ப்பை, அசாட் அரசாங்கம் எவ்வாறு கையாளுமென்பது, கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .